சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள 115 வீரர், வீராங்கனைகளை கொண்ட இந்திய அணி ஜூலை 14ம் தேதி தனி விமானத்தில் ஜப்பான் புறப்பட்டுச் செல்லும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. காணொளி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள பவானிதேவி (வாள்வீச்சு), சரத் கமல், சத்யன் ஞானசேகரன்(டேபிள் டென்னிஸ்), சஜன் பிரகாஷ் (நீச்சல்), டூட்டீ சந்த் (தடகளம்), கே.சி.கணபதி, வருண் தாக்கர் (பாய்மர படகு) ஆகியோர் பல்வேறு நாடுகளில் இருந்தபடி பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சத்யன், ‘அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது கடினமானதுதான். அரங்கில் இருந்து கிடைக்கும் ஆதரவு வீரர்களுக்கு ஆற்றலை தரும். ஆனால், இப்போது சூழல் சரியில்லை. எனவே ரசிகர்கள் இல்லாமல், குறைந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாட எங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளோம்’ என்றார். பின்னர் பேசிய இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, ‘இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் சாதிப்பார்கள். குறைந்தது 10 பதக்கங்களை வெல்வார்கள். அதற்காக 115 பேரை கொண்ட இந்திய அணி தனி விமானம் மூலம் ஜூலை 14ம் தேதி ஜப்பான் செல்கிறது. எஞ்சியவர்கள் அடுத்தடுத்த நாட்களிலும், வெளிநாடுகளில் இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள் நேரடியாகவும் ஜப்பான் செல்வார்கள்’ என்றார். முதலில் ஒலிம்பிக் நடைபெறும் இடத்திற்கு வெளியே தங்குவார்கள். அங்கு போய்ச் சேரும் நாளை தவிர்த்து மேலும் 3 நாட்கள் குவாரன்டைன் கட்டாயம். அதன் பிறகு போட்டிகள் நடைபெறும் டோக்கியோ போய் தங்குவார்கள். பயிற்சி மேற்கொள்வதுடன், தொடக்க விழா அணி வகுப்பிலும் பங்கேற்பார்கள். காணொளி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகளும் பள்ளியின் இயக்குநருமான செந்தாமரை சபரீசன், யூ திங்க் அறக்கட்டளை நிறுவனர் அப்துல் கனி ஆகியோரும் பங்கேற்றனர்.
from Dinakaran.com |04 Jul 2021 https://ift.tt/3AsG3bq
via IFTTT
0 Comments