ஜோதிடம்

சென்னை: ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, தமிழகத்தை சேர்ந்த 5 தடகள நட்சத்திரங்கள் தகுதி பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க  தமிழகத்தைச் சேர்ந்த  இளவேனில் வாலறிவன் (துப்பாக்கிசுடுதல்), பவானி தேவி (வாள்வீச்சு),  சத்யன் ஞானசேகரன், சரத் கமல் (டேபிள் டென்னிஸ்),  நேத்ரா குமணன், கே.சி.கணபதி, வருண் தாக்கர் (பாய் மர படகு) ஆகிய 7 பேர் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில்,  மேலும் 5 தமிழக வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு  தகுதிபெற்று சாதனை படைத்துள்ளனர். அதிலும் எளிமையான குடும்பங்களை சேர்ந்த இவர்கள் அதிக உடல்வலிமை  தேவைப்படும்  தடகளத்தில் சாதித்து வருகின்றனர்.வீரர்கள் ஆேராக்ய ராஜீவ் (லால்குடி, திருச்சி),  நாகநாதன் பாண்டி (சிங்கபுலியம்பட்டி, ராமநாதபுரம்) இருவரும் ஆடவர் 4X400 தொடர் ஓட்டத்தில் பங்கேற்க உள்ளனர். வீராங்கனைகள் தனலட்சுமி சேகர் (குண்டூர்,திருச்சி), ரேவதி வீரமணி (சக்கிமங்கலம், மதுரை), சுபா வெங்கடேன் (திருச்சி) ஆகிய மூவரும்  கலப்பு 4X400 தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளனர். இதில் ராஜீவ் 2வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்,  தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். * மதுரை டூ டோக்கியோ!மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். இவரது பாட்டி ஆரம்மாள், காய்கறிகளை விற்று ரேவதியையும், அவரது தங்கை ரேகாவையும் வளர்த்து வருகிறார். ரேகா காவல்துறையில் பணிபுரிகிறார். ஜூலை 4ல் நடந்த தகுதிச்சுற்றில் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து இவர் சாதனை புரிந்துள்ளார். அதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள மையத்தில் இவர் பயிற்சி பெற்று வருகிறார்.  தங்கம் வெல்வேன்: ஒலிம்பிக் அணியில் தேர்வாகி பங்கெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு தடைகளைக் கடந்து இந்த சாதனை படைத்தது பெருமையாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஒலிம்பிக்கில் தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றிகள் குவிப்பேன். தமிழக அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் தந்து என்னைப் போன்றவர்களை ஊக்குவிக்கிறது. தங்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் போட்டியில் கள மிறங்குவேன் என்றார் ரேவதி.* கலக்கும் கமுதி போலீஸ்!ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சிங்கம்புலியப்பட்டியை சேர்ந்த விவசாயி பாண்டி - பஞ்சவர்ணம் தம்பதி மகன் நாகநாதன் (26). பிஏ படித்த இவர், பள்ளிப்பருவம் முதலே கபடி, தடகளப் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது சென்னை ஆயுதப்படை  பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளில் காவல்துறை சார்பில் பங்கேற்றுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற தடகள போட்டியில் ஓட்டப்போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 400 மீட்டர் ரிலே ஓட்டப்போட்டியில் 2ம் இடம் பிடித்தார். 2019ம் ஆண்டு கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் கலப்பு 4x400 மீ  ஓட்டத்தில் இந்திய அணி இறுதி வரை சென்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் இடம் பெற்றிருந்த நாகநாதன், டோக்கியோ ஒலிம்பிக்கில் 4x400 மீ ரிலே ஓட்டப்போட்டியில் பங்கேற்க உள்ளார்.



from Dinakaran.com |07 Jul 2021 https://ift.tt/36fXsWW
via IFTTT

Post a Comment

0 Comments