டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடர், கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா முதல் முறையாக 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி நடந்து வந்த 32வது ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 205 நாடுகளை சேர்ந்த அணிகளுடன் ஒலிம்பிக் கமிட்டியின் அகதிகள் அணியும் களமிறங்கியது. இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 126 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பிரமாண்ட குழு பங்கேற்றது. துப்பாக்கிசுடுதல் மற்றும் வில்வித்தையில் இந்தியா கணிசமான பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த போட்டிகளில் ஒரு பதக்கம் கூட கிடைக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.எனினும், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும், மகளிர் பேட்மின்டனில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் லவ்லினா வெண்கலம் வென்று ஆறுதல் அளித்தனர். மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா வெள்ளி, பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றனர். ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டது. போட்டி முடிவதற்கு ஒருநாள் முன்பாக ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலமாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தது. முன்னதாக, 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நீரஜ் வென்ற தங்கத்தால் ஒரேயடியாக 20 இடங்கள் முன்னேறிய இந்தியா இறுதி பதக்க பட்டியலில் 48வது இடம் பிடித்தது. அமெரிக்கா முதலிடம்: கடைசி நாளான நேற்று மகளிர் கூடைப்பந்து, ஆண்கள் குத்துச்சண்டை (63 கிலோ), சைக்கிளிங் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க அணி... 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 113 பதக்கங்களுடன் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது. சீனா மொத்தம் 88 பதக்கங்களை வென்று (38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம்) 2வது இடம் பிடித்தது. போட்டியை நடத்திய ஜப்பான் 3வது இடமும், இங்கிலாந்து, ஒலிம்பிக் அகதிகள் அணி முறையே 4வது, 5வது இடத்தை பிடித்தன. நிறைவு விழா: இரண்டு வாரங்களுக்கும் மேலாக விளையாட்டு ரசிகர்களை மகிழ்வித்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழா அணிவகுப்பில், இந்தியா சார்பில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடி ஏந்தி வலம் வந்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், 32வது ஒலிம்பிக் போட்டி நிறைவடைவதாக முறைப்படி அறிவித்தார். பின்னர் பேசிய அவர், ‘ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகவும் சவாலான போட்டித் தொடரை நடத்தி முடித்துள்ளோம். ஒரு கட்டத்தில் இந்த போட்டியை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், தங்களை வருத்திக் கொண்டு கடுமையாக பயிற்சி செய்து தயாரான வீரர், வீராங்கனைகளுக்காகவே போட்டியை தொடர்ந்து நடத்தினோம். அதற்கேற்ப அவர்களும் முழு அர்ப்பணிப்புடன் விளையாடி பெருமை சேர்த்தனர்’ என்றார். ஒலிம்பிக் கீதம் இசைக்க கொடி கீழிறக்கப்பட்டு அதை டோக்கியோ கவர்னர் தாமஸ் பாக்கிடம் ஒப்படைத்தார். அவர் அதை அடுத்த ஒலிம்பிக் போட்டியை 2024ம் ஆண்டு நடத்த உள்ள பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகர மேயரிடம் வழங்கினார். பின்னர் பிரான்ஸ் தேசிய கீதம் இசைக்க அந்நாட்டு கொடி ஏற்றப்பட்டது. இறுதியாக ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட, வாணவேடிக்கையில் டோக்கியோ நகரமே வண்ணமயமாக ஜொலித்தது. அடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி இம்மாதம் 24ம் தேதி டோக்கியோவில் தொடங்கி செப். 5ம் தேதி வரை நடைபெறும்.
from Dinakaran.com |09 Aug 2021 https://ift.tt/3fIIm1v
via IFTTT
0 Comments