துபாய்: உலக கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணையை ஐசிசி நேற்று அறிவித்தது. இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்.17ல் தொடங்கி நவ.14 வரை நடக்கும் என்று ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஆட்டங்கள் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30, இரவு 7.30க்கு ஓமன், அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயில் தொடங்கும். தகுதிச் சுற்று (அக். 17-22 சுற்று 1) ஏ பிரிவில் ஓமன், பப்புவா நியூ கினியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும், பி பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, இலங்கை, நமீபியா அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 12: சுற்று 1ல் இருந்து முன்னேறிய 4 அணிகளுடன், ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்ற இந்தியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகளும் சூப்பர் 12 சுற்றில் களமிறங்கும். முதல் பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஏ1, பி2 அணிகளும், 2வது பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பி1, ஏ2 அணிகளும் இடம் பெறும். சூப்பர் 12 சுற்றில் (அக்.23 - நவ.8) இந்தியா - பாகிஸ்தான் மோதும் பரபரப்பான 2வது பிரிவு லீக் ஆட்டம் அக். 24ல் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதி அபுதாபியிலும் (நவ.10), 2வது அரையிறுதி துபாயிலும் (நவ.11) நடக்க உள்ளன. பைனல் நவ.14ம் தேதி துபாயில் நடக்கும்.
from Dinakaran.com |18 Aug 2021 https://ift.tt/3g9hcku
via IFTTT
0 Comments