டோக்கியோ: மகளிர் ஹாக்கி வெண்கல பதக்கத்துக்கான மோதலில் இந்திய அணி 3-4 என்ற கோல் இங்கிலாந்திடம் போராடி தோற்றாலும், தங்களின் உறுதியான ஆட்டத்தால் அனைவரின் இதயங்களையும் வென்று அசத்தியது. ஒலிம்பிக் லீக் சுற்றில் ‘ஹாட்ரிக்’ தோல்வியுடன் மிக மோசமாகத் தொடங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி, அடுத்தடுத்த ஆட்டங்களில் அயர்லாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழத்தி முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் போராடி தோற்ற நிலையில், 3வது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியை நேற்று எதிர்கொண்டது. இரு அணிகளும் பதக்கம் வெல்லும் முனைப்புடன் வேகம் காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் கால்பகுதி 0-0 என சமனில் முடிய, 2வது கால்பகுதியில் இங்கிலாந்து வீராங்கனைகள் எலெனா 16வது நிமிடத்திலும், சாரா 24வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடித்து 2-0 என முன்னிலை ஏற்படுத்தினர்.கொஞ்சமும் அசராத இந்திய அணி பதில் தாக்குதலை தீவிரப்படுத்த... 25வது மற்றும் 26வது நிமிடங்களில் அடுத்தடுத்து கிடைத்த 2 பெனால்டி கார்னர் வாயப்புகளையும் குர்ஜித் கவுர் அசத்தலாக கோலாக்கினார். அதே வேகத்துடன் ஒருங்கிணைந்து விளையாடி நெருக்குதல் கொடுத்த இந்திய அணிக்கு 29வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா பீல்டு கோல் அடித்து அசத்த, 2வது கால்பகுதி முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது. 3வது கால்பகுதியில் பிரிட்டனின் ஹோல்லி 35வது நிமிடத்தில் பீல்டு கோல் அடிக்க 3வது கால்பகுதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் 3-3 என சமநிலை வகித்தன. பரபரப்பான கடைசி கால்பகுதி ஆட்டத்தில், 48வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை பிரிட்டன் வீராங்னை கிரேஸ் கோலாக்கினார். கடைசி வரை கடுமையாகப் போராடியும் இந்தியாவால் மேற்கொண்டு கோலடிக்க முடியவில்லை.ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 4-3 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலத்தை வசப்படுத்தியது. மிகச் சிறப்பாக விளையாடியும் பதக்கத்தை முத்தமிட முடியாமல் போனதால், சோகத்தில் ஆழ்ந்த இந்திய வீராங்கனைகள் கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினர். அதே நேரத்தில் தங்களின் தரமான ஆட்டம் மற்றும் போராட்ட குணத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை அவர்கள் கொள்ளையடித்தனர். இறுதி வரை போராடிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.அழ வேண்டாம்... உங்களால் தேசத்துக்கே பெருமை!வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் இங்கிலாந்திடம் போராடி தோற்ற இந்திய அணி வீராங்கனைகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சிறப்பாக விளையாடியதற்காக அனைவரையும் பாராட்டினார். காயம் அடைந்த நவ்னீத் கவுர் பற்றியும் நலம் விசாரித்த அவர், வந்தனா கட்டாரியா மற்றும் சாலிமா டெடேவின் அற்புதமான ஆட்டத்தை வெகுவாகப் புகழ்ந்தார். தொடர்ந்து பேசிய பிரதமர்...‘அழுவதை நிறுத்துங்கள். உங்கள் அழுகையை என்னால் கேட்க முடிகிறது. தேசமே உங்களை நினைத்து பெருமைப்படுகிறது. இந்த தோல்வியால் துவண்டுவிடாதீர்கள். உங்களின் கடுமையான முயற்சியால், பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியாவின் அடையாளமான ஹாக்கி விளையாட்டு தலைநிமிர்ந்துள்ளது. உங்கள் வியர்வை, நாட்டின் கோடிக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அனைத்து வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். * லீக் சுற்றில் இங்கிலாந்திடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோற்ற இந்தியா, 3வது இடத்துக்கான மோதலில் 3-4 என்ற அளவில் முன்னேற்றம் கண்டது.* தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்ததின் மூலம் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோலடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வந்தனா கட்டாரியா பெற்றுள்ளார்.* மகளிர் ஹாக்கி பைனலில் நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அர்ஜென்டினா வெள்ளிப் பதக்கம் பெற்றது.* ஒலிம்பிக்கில் அசத்திய இந்திய வீராங்கனைகளுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில் வந்தனா மீதான சாதியரீதியிலான தாக்குதலுக்கும் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு பிரபலங்கள் மற்றும் ஹாக்கி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
from Dinakaran.com |07 Aug 2021 https://ift.tt/3fX1cCj
via IFTTT
0 Comments