டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் உயரம் தாண்டுதல்- டீ47 பிரிவில் இந்திய வீரர் நிஷத் குமார் (21 வயது) வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இந்த போட்டியில் அமெரிக்காவின் ரோடெரிக் டவுன்செண்ட் 2.15 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 2வது இடம் பிடித்த நிஷத் குமார் (2.06 மீ.), மற்றொரு அமெரிக்க வீரர் வைஸ் டல்லாஸ் (2.06 மீ.) இருவரும் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இதே பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ராம் பால் 1.94 மீட்டர் உயரம் தாண்டி 5வது இடம் பிடித்தார். இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த நிஷத் 8 வயது சிறுவனாக இருந்தபோது சாலை விபத்தில் சிக்கி வலது கையை இழந்தவர். பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த இவருக்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. பல்வேறு தடைகளை தாண்டி பாரா ஒலிம்பிக் பதக்கத்தை முத்தமிட்டுள்ள நிஷத் குமாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/3zrAXeI
via IFTTT
0 Comments