ஜோதிடம்

துபாய்: அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் குவாலிபயர்-1 ஆட்டத்தில்  டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் டி20 தொடரின்  லீக் சுற்று நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.   புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த  டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதல் இடத்தை பிடித்த டெல்லி அணியும், 2வது இடத்தை பிடித்த சென்னை அணியும்  முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. துபாயில் இரவு 7.30க்கு தொடங்கி நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக அக்.15ம் தேதி நடைபெற உள்ள  இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். தோற்கும் அணி குவாலிபயர்-2ல் விளையாடும். எலிமினேட்டர் ஆட்டத்தில்  நாளை  3வது இடத்தை பிடித்த பெங்களூர், 4வது இடத்தை பிடித்த கொல்கத்தா அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2வது குவாலிபயர் ஆட்டத்துக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு  தகுதி பெறும். எனவே இன்று வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேற முடியும் என்பதால்  இரு அணிகளுமே  கூடுதல்  முனைப்புடன் களமிறங்குகின்றன. கடந்த ஆண்டு லீக் சுற்றில் 2வது இடத்தை பிடித்த டெல்லி, இறுதி ஆட்டம் வரை முன்னேறி மும்பையிடம் தோற்றதால் 2வது இடம் கிடைத்தது. ஆனால், இந்த தொடரில்  ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி  லீக் சுற்றில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி 14 லீக் ஆட்டங்களில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20புள்ளிகளை ஈட்டியது. சென்னை 14 ஆட்டங்களில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் சேர்த்தது. மொத்தத்தில் நடப்புத் தொடரில் சென்னையை விட டெல்லியே வலுவான அணியாக இருக்கிறது. பிரித்வி, தவான், ஷ்ரேயாஸ், ரிஷப், ஹெட்மயர் உடன் ஆல் ரவுண்டர்கள் கிறிஸ் வோக்ஸ், அஷ்வின், அக்சர் என நீண்ட பேட்டிங் வரிசை டெல்லியிடம் இருக்கிறது. பந்துவீச்சிலும் வலுவாக உள்ளது டெல்லி அணிக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. அதுமட்டுமல்ல, நடப்புத் தொடரின் லீக் சுற்றில்  சென்னையுடன் மோதிய 2 முறையும் டெல்லி அணியே வென்றுள்ளது.   ஆனாலும் சென்னை அணியை குறைத்து மதிப்பிட முடியாது.  தோனி சொன்னது போல் அதிர்ஷ்டம்  அவர்களை வெற்றி பெற வைத்துள்ளது.  அந்த அதிர்ஷ்டம் லீக் சுற்றில் 2வது இடத்துக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. முன் வரிசையில் கெய்க்வாட், டு பிளெஸ்ஸி  தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். மொயீன்,   ராயுடு அவ்வப்போது கவனிக்க வைக்கின்றனர். பின் வரிசையில் ஜடேஜா கலக்குகிறார். தோனி, ரெய்னா, பிராவோ ஆகியோரும் அதிரடி காட்டினால் சிஎஸ்கே அணியை கட்டுப்படுத்துவது கடினம். பந்துவீச்சும் அவ்வப்போது அணியை கரை சேர்த்திருக்கிறது. எல்லாவற்றையும் விட தோனியின் அனுபவம், வித்தியாசமான வியூகங்கள் சென்னை அணியின் துருப்புச்சீட்டாக உள்ளன. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.



from Dinakaran.com |10 Oct 2021 https://ift.tt/3anBUKf
via IFTTT

Post a Comment

0 Comments