பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா மோதல்: துபாய்: உலக கோப்பை டி20 தொடரின் 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றின் 2வது பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 5 லீக் ஆட்டங்களிலும் அபாரமாக வென்று 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. முதல் பிரிவில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா, ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்ரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2வது இடம் பிடித்ததால் அரையிறுதக்கு முன்னேறியது. இந்த நிலையில், இன்று இரவு துபாயில் நடக்கும் 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் இந்த 2 அணிகளும் 2வது முறையாக அரையிறுதியில் மோத உள்ளன. முந்தைய மோதலில் ஆஸி. வென்றிருந்தாலும், நடப்பு தொடரில் பாகிஸ்தான் வலுவான அணியாக புதிய எழுச்சி கண்டுள்ளது. பாபர் ஆஸம் தலைமையிலான பாக். அணி, உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவை ஒருமுறை கூட வென்றதில்லை என்ற சோக வரலாற்றை இந்த தொடரில் மாற்றிக் காட்டியுள்ளது. ரிஸ்வான், பாபர், ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி ஆகியோர் அதிரடி பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். பந்து வீச்சில் ஷாகீன் அப்ரிடி, ஹரிஸ் ராவுப், ஷதாப் கான், ஹசன் அலி ஆகியோர் மிரட்டுகின்றனர். அதனால் 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் பாக் உள்ளது.அதே சமயம் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணியிலும் உலகத்தரத்திலான வீரர்கள் அணிவகுக்கின்றனர். தொடக்க வீரர் டேவிட் வார்னர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது, அந்த அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. பிஞ்ச், மிட்செல் மார்ஷல், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், மேத்யூ வேடு... என வலுவான பேட்டிங் வரிசை, பாக். பந்துவீச்சை சிதறடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனினும்... ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா ஆகியோரின் பந்துவீச்சு கூட்டணி மிக வலுவாக அமைந்துள்ளதால், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு சரியான சவால் காத்திருக்கிறது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஒரு ஆட்டம் கைவிடப்பட, தலா 2 ஆட்டங்களில் வென்று சமநிலை வகிக்கின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் ஆவேசம் காட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது.* அணிகள்பாகிஸ்தான்: பாபர் ஆஸம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, பகார் ஸமான், ஹைதர் அலி, ஹரிஸ் ராவுப், ஹசன் அலி, இமத் வாசிம், முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சர்பராஸ் அகமது, ஷாகீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக். ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), ஆஷ்டன் ஏகார், டேன் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேடு, டேவிட் வார்னர், ஆடம் ஸம்பா.நேருக்கு நேர்...பாகிஸ்தான் - ஆஸ்திரலேியா அணிகள் இதுவரை 23 சர்வதேச டி20ல் மோதியுள்ளன. அவற்றில் பாகிஸ்தான் 13 ஆட்டங்களிலும், ஆஸி. 9 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக ஆஸி. 197 ரன்னும், பாக் 194 ரன்னும் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பாக் 74 ரன்னும், ஆஸி. 41 ரன்னும் (கைவிடப்பட்ட ஆட்டம்) எடுத்துள்ளன. டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் 6 ஆட்டங்களில் விளையாடி 3 - 3 என சமநிலை வகிக்கின்றன. 2010 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதிய ஆஸி. 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. உலக கோப்பை ஆட்டங்களில் அதிகபட்சமாக ஆஸி. 197 ரன், பாக். 191 ரன் சேர்த்துள்ளன. குறைந்தபட்சமாக பாக். 149 ரன், ஆஸி. 117 ரன் எடுத்துள்ளன.
from Dinakaran.com |11 Nov 2021 https://ift.tt/3wxIUyi
via IFTTT
0 Comments