விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் எலைட் டி பிரிவில் இடம் பெற்றுள்ள மகாராஷ்டிரா அணி, நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் சண்டிகர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற மஹாராஷ்டிரா முதலில் பந்துவீச, சண்டிகர் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன் குவித்தது. கேப்டன் மனன் வோரா 141 ரன் (139 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), அர்ஸ்லன் கான் 87, அங்கித் கவுஷிக் 56 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய மகாராஷ்டிரா 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன் எடுத்து வென்றது. கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் 168 ரன் (132 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்), யஷ் நாஹர் 38, அஸிம் காஸி 73* ரன் விளாசினர். நடப்பு தொடரில் தனது 4வது சதத்தை பதிவு செய்த கெயிக்வாட், விஜய் ஹசாரே டிராபியில் கோஹ்லி, பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல்ஆகியோரின் சாதனையை (தலா 4 சதம்) சமன் செய்தார். மேலும், நடப்பு தொடரின் 500 ரன் குவித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. டி பிரிவில் கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா தலா 16 புள்ளி பெற்ற நிலையில், ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்த கேரளா காலிறுதிக்கு முன்னேறியது. டிச. 19ம் தேதி நடைபெற உள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விதர்பா - திரிபுரா, கர்நாடகா - ராஜஸ்தான், உத்தர பிரதேசம் - மத்திய பிரதேசம் மோதுகின்றன.
from Dinakaran.com |15 Dec 2021 https://ift.tt/30pjp6G
via IFTTT
0 Comments