காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் கையில் ஆட்சி போனாலும், கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டும் எந்த தடையும் இல்லை. ஆட்சி மாற்றம் நடந்த பிறகு அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். மற்ற விளையாட்டுகளிலும் பயிற்சிகள் கூட நிறுத்தப்பட்டன. மாறாக ஆப்கான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்றது. அதன் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், தொடர்ச்சியாக 2022, 2023ம் ஆண்டுகளில் ஆப்கான் பங்கேற்க உள்ள போட்டி அட்டவணையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் நெதர்லாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி - பிப்ரவரியில் ஜிம்பாப்வே, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் வங்கதேசம், மார்ச் மாதம் இந்தியா, ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அயர்லாந்து, ஆகஸ்ட் செப்டம்பரில் ஆசிய கோப்பை தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கும், அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கும் செல்கிறது. இடையில் மே - ஜூனில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. நெதர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடனான உள்ளூர் ஆட்டம் ஆப்கானுக்கு பதிலாக கத்தாரில் நடக்கும். இப்படி 2023 நவம்பர் வரை மீண்டும் ஜிம்பாப்வே, இலங்கை, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுடன் ஆப்கான் விளையாடும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் மாதம் இந்தியா வரும் ஆப்கான் அணி 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாட உள்ளது. இந்த ஆட்டங்கள் நடைபெறும் தேதி, களம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.
from Dinakaran.com |15 Dec 2021 https://ift.tt/3GNUrxz
via IFTTT
0 Comments