ஜெய்பூர்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 2வது காலிறுதியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் இன்று மோதுகின்றன. இத்தொடரின் எலைட் பி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழகம், கர்நாடகா லீக் சுற்று முடிவில் தலா 3 வெற்றிகளை பெற்றன. ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு நேரடியாக காலிறுதிக்கும், 2வது இடம் பிடித்த கர்நாடகா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெற்றன. ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கர்நாடகா காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் ஜெய்பூரில் நடக்கின்றன. இன்று நடைபெறும் 2வது காலிறுதியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதுகின்றன. விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி ஏற்கனவே லீக் சுற்றில் கர்நாடகாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் களம் காண்கிறது. சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 பைனலிலும் கர்நாடகாவை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளதால், தமிழக வீரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளனர். எனினும், ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து 2 தோல்வியை தழுவிய தமிழக அணி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் முனைப்புடன் களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் இமாச்சல் - உத்தர பிரதேசம் மோதுகின்றன.
from Dinakaran.com |21 Dec 2021 https://ift.tt/3ElxwrS
via IFTTT
0 Comments