ஆன்டிகுவா, பிப். 5: ஐசிசி யு19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் இத்தொடரில், யஷ் துல் தலைமையிலான இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருகிறது. லீக் சுற்றின் பி பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் நாக்ட் அவுட் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, காலிறுதியில் வங்கதேச அணியையும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி, 8வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது. ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி, காலிறுதியில் தென் ஆப்ரிக்காவையும், அரையிறுதியில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. நார்த் சவுண்ட், ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30க்கு தொடங்குகிறது. 4 முறை கோப்பையை முத்தமிட்டுள்ள இந்தியா, 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. கேப்டன் யஷ் துல், துணை கேப்டன் ஷேக் ரஷீத் அருமையான பார்மில் உள்ளனர். அவர்களுடன் ரகுவன்ஷி, ஹர்னூர், ராஜ்வர்தன், நிஷாந்த், தினேஷ் ஆகியோரும் கணிசமாக ரன் குவித்தால் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம். ராஜ்வர்தன், ரவிகுமார் வேகக் கூட்டணியும், விக்கி ஆஸ்வால் சுழலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். 2008ம் ஆண்டு யு-19 உலக கோப்பையை கைப்பற்றி அசத்திய விராத் கோஹ்லியின் வாழ்த்து மற்றும் ஆலோசனைகளால் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளது. அதே சமயம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ள இங்கிலாந்து அணியும் 2வது முறையாக கோப்பையை கைப்பற்ற வரிந்து கட்டுவதால் பைனலில் அனல் பறப்பது உறுதி.
from Dinakaran.com |05 Feb 2022 https://ift.tt/szUiNTk
via IFTTT
0 Comments