கிறைஸ்ட்சர்ச்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.ஹேக்லி ஓவல் மைதானத்தில் கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 49.2 ஓவரில் 95 ரன்னுக்கு சுருண்டது. நியூசியின் மேட் ஹென்றி 7 விக்கெட் அள்ளி அசத்தினார். நியூசி முதல் இன்னிங்சில் 482 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஹென்றி நிகோல்ஸ் 105 ரன், டாம் பிளண்டெல் 96 ரன், மேட் ஹென்றி 58* ரன் விளாசினர். தென் ஆப்ரிக்க தரப்பில் ஆலிவர் 3 விக்கெட் எடுத்தார்.இதையடுத்து 387 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தெ.ஆப்ரிக்கா, 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்திருந்தது. பவுமா 22, டசன் 9 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். நியூசி. வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்ரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அந்த அணி 41.4 ஓவரில் 111 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுக்க, நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அதிகபட்சமாக பவுமா 41 ரன், கைல் வெர்ரைன் 30 ரன் எடுத்தனர். நியூசி தரப்பில் டிம் சவுத்தீ 5, மேட் ஹென்றி, வேக்னர் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆல் ரவுண்டராக அசத்திய மேட் ஹென்றி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் இதே மைதானத்தில் பிப். 25ம் தேதி தொடங்குகிறது. தெ.ஆப்ரிக்காவுக்கு எதிராக 46 டெஸ்டில் விளையாடி உள்ள நியூசிக்கு இது 5வது வெற்றியாகும். ஒருமுறை கூட தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற சோக வரலாற்றுக்கு, இம்முறை நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Dinakaran.com |20 Feb 2022 https://ift.tt/TUk4B3p
via IFTTT
0 Comments