ஜோதிடம்

அகமதாபாத்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒருநாள் போட்டி, மோடி  ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியா  வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20  தொடர்களில விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள்  பிப்.6,  9, 11 தேதிகளில்  அகமதாபாத்திலும்,  டி20 போட்டிகள் பிப்.11, 16, 18 தேதிகளில்  கொல்கத்தாவிலும் நடக்க உள்ளன. முதல் ஒருநாள் போட்டி  இன்று பிற்பகல் 1.30  மணிக்கு  பகல்/இரவு ஆட்டமாக அகமதாபாத்தில் தொடங்குகிறது.கேப்டன்  பொறுப்பு ஏற்ற பிறகு ரோகித் சர்மா களமிறங்கும் முதல் ஒருநாள் போட்டி இது.  இந்திய மண்ணில் கேப்டனாக இல்லாமல் கோஹ்லி விளையாடும் முதல் ஒருநாள்  போட்டியும் இதுதான். இந்திய அணியில் பெரும்பாலும் புது முகங்களாகவும், இளம்  வீரார்களாகவும் இருக்கின்றர்.  வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணிக்கு  திரும்பியுள்ளார். தவான்,  ஷ்ரேயாஸ், ருதுராஜ், சைனி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவசர அழைப்பின் பேரில் அணியில் இணைந்த மயாங்க்  அகர்வாலுக்கும் கட்டாய தனிமைப்படுத்தல் முடியாததால், ரோகித்துடன் இணைந்து  இஷான் கிஷன் இன்னிங்சை தொடங்க உள்ளார். சுழலுக்கு சாதகமான இந்திய  ஆடுகளங்களில் வாஷிங்டன், சாஹல் இருவரும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. அதே  சமயம் போலார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள பல வீரர்கள் இந்திய  மண்ணில் ஆடி பழக்கப்பட்டவர்கள். கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான  ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், அடுத்து இங்கிலாந்துடன் நடந்த  டி20 தொடரை 3-2 என கைப்பற்றிய உற்சாகத்துடன் வெஸ்ட் இண்டீஸ்  களமிறங்குகிறது. ரஸ்ஸல்,  ஹெட்மயர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில்  இல்லாதது பின்னடைவுதான்.  எனினும்...  அகீல், ரொமாரியா, ஓடியன் என புது முக வீரர்கள் சிறப்பாக பங்களிப்பது  அணிக்கு வலு சேர்க்கிறது. வெற்றியுடன் தொடங்க இரு அணிகளுமே  வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டம்  ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.இந்தியா:  ரோகித் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), கோஹ்லி, சூரியகுமார்,  இஷான் கிஷன் (கீப்பர்), தீபக் ஹூடா, பன்ட் (கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல்  தாகூர், சாஹல், குல்தீப், சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித்  கிருஷ்ணா, ஆவேஷ் கான்.வெ.இண்டீஸ்: போலார்டு (கேப்டன்), பேபியன் ஆலன், என்க்ருமா போனர், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் உசேன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓடியன் ஸ்மித், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.இந்தியா 1000: இந்தியா தனது 1000வது ஒருநாள் போட்டியில் இன்று விளையாடுகிறது. இந்த பெருமையை பெறும் முதல் அணி இந்தியா தான். இதுவரை விளையாடிய 999 போட்டிகளில் 518 வெற்றி, 431 தோல்வி  கண்டுள்ளது. 9 ஆட்டங்கள் சரிநிகர் சமனில் (டை) முடிந்தன. மீதி 41 ஆட்டங்கள்  கைவிடப்பட்டன.* இந்தியா 1974ல் தான் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. ஹெடிங்லியில் நடந்த அப்போட்டியில் (ஜூலை 13) இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது (தலா 60 ஓவர் கொண்ட போட்டி).* அதே ஹெடிங்லியில் 1975, ஜூன் 11ல் நடந்த உலக கோப்பை ஆட்டத்தில் வெங்கடராகவன் தலைமையிலான இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் கிழக்கு ஆப்ரிக்காவை வீழ்த்தியது. தனது 4வது ஒருநாள் போட்டியில்தான் இந்தியா முதல் வெற்றியை சுவைத்தது.* 100, 200, 800வது ஆட்டங்களில் முறையே 1986, 1992, 2012ல் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.* 300வது ஆட்டத்தில் 1996ல் தென் ஆப்ரிக்காவிடமும் தோற்றது.* 400வது ஆட்டத்தில் (1999) கென்யாவை வீழ்த்தியது.* இங்கிலாந்துக்கு எதிராக 2002ல் நடந்த 500வது ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.* 600வது ஆட்டத்தில் (2005) இலங்கையையும், 700வது ஆட்டத்தில் (2008) இங்கிலாந்தையும், 900வது ஆட்டத்தில் (2016) நியூசிலாந்தையும் வென்றுள்ளது.* இந்தியா கடைசியாக 2021ல் இலங்கையில் நடந்த 995வது போட்டியில் தான் வென்றது. அதன் பிறகு நடந்த 4 போட்டிகளிலும் (இலங்கை 1, தெ.ஆப்ரிக்கா 3) தோற்றுள்ளது.



from Dinakaran.com |06 Feb 2022 https://ift.tt/gUzPVTQ
via IFTTT

Post a Comment

0 Comments