ஜோதிடம்

கிறைஸ்ட்சர்ச்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்புடன் நியூசிலாந்து அணி இன்று 2வது டெஸ்டின் கடைசி நாள் சவாலை சந்திக்கிறது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. 71 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை  தொடங்கிய தென் ஆப்ரிக்கா 3ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்திருந்தது. கைல் 22 ரன்,  முல்டர் 10 ரன்னுடன் நேற்று 4 நாள் ஆட்டத்தை தொடங்கினர். முல்டர் 35 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ரபாடா அதிரடியாக விளையாடி 47 ரன் (34 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார்.  மார்கோ 9, கேசவ் 4 ரன்னில் வெளியேற, பொறுப்புடன் விளையாடிய கைல் வெரைன் தனது முதல் டெஸ்ட் சதத்தை விளாசினார். தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கைல் 136*, சிப்மலா 10* ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  நியூசி. தரப்பில் சவுத்தீ, ஹென்றி, ஜேமிசன், வேக்னர் தலா 2, கிராண்ட்ஹோம் 1 விக்கெட் வீழத்தினர். இதைத் தொடர்ந்து, 426 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை நியூசி. விளையாடியது. கேப்டன் லாதம் 1, யங் 0, நிகோல்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, நியூசி. 25 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. கான்வே - டேரில் மிட்செல் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தனர். டேரில் 24 ரன்னில் வெளியேறினார். 4ம் நாள் முடிவில் நியூசி. 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்துள்ளது ( 42 ஓவர்). கான்வே 60 ரன்,  பிளெண்டல் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்க தரப்பில் ரபாடா, கேசவ் தலா 2 விக்கெட் எடுத்தனர். கைவசம் 6 விக்கெட் இருக்க, இன்னும் 332 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து இன்று இன்று கடைசிநாள் சவாலை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்தில் நியூசி. வென்றால்  2-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும். கூடவே டெஸ்ட் தொடரில் முதல் முறையாக  தென் ஆப்ரிக்காவை வென்ற வரலாற்றையும் படைக்கும்.  குறைந்தபட்சம் டிரா செய்தால் கூட 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கலாம். நியூசி. தோற்றால்  1-1 என தொடர் சமனில் முடிவதுடன், டெஸ்ட் தொடரில் ஒருமுறை கூட தெ.ஆப்ரிக்காவை  வென்றதில்லை என்ற சோக வரலாறு தொடரும்.



from Dinakaran.com |01 Mar 2022 https://ift.tt/Gz0fNUW
via IFTTT

Post a Comment

0 Comments