பெங்களூர்: இந்தியா - இலங்கை அணிகள் முதல் முறையாக மோதும் பகல்/இரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடந்த முதல் டெஸ்டில், அபாரமாக விளையாடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் பகல்/இரவு போட்டியாக பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் முறையாக பகல்/இரவு டெஸ்டில் மோதுவது குறிப்பிடத்தக்கது.மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியில், இந்தியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி 2-0 என தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. இலங்கையை ஒயிட்வாஷ் செய்தால் ஐசிசி டெஸ்ட் உலக கோப்பைக்கான தரவரிசைப் புள்ளிகளும் கணிசமாகக் கிடைக்கும். முதல் டெஸ்டில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா, இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்சர் சேர்க்கப்படலாம். 28 மாதமாக கண்ணாமூச்சி காட்டும் சர்வதேச சதத்தை இந்த பகல்/இரவு டெஸ்டிலாவது கண்டுபிடிப்பாரா கோஹ்லி? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியில் கட்டாயம் மாற்றம் உண்டு. பதும் நிசங்கா, துஷ்மந்த சமீரா, லாகிரு குமாரா ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. சமிகா கருணரத்னே, தினேஷ் சண்டிமாலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். பலம் வாய்ந்த இந்திய அணியின் தாக்குதலை, இலங்கை 3 நாட்களுக்காவது தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.* இந்தியாவில் நடைபெறும் 3வது பகல்/இரவு டெஸ்ட் இது. முதல் போட்டி 2019ல் வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்தது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது.* சொந்த மண்ணில் விளையாடிய 2 பகல்/இரவு டெஸ்டிலும் வென்ற இந்தியா, 2021ல் ஆஸி.க்கு எதிராக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் தோற்றுள்ளது.
from Dinakaran.com |12 Mar 2022 https://ift.tt/Nn8tJOl
via IFTTT
0 Comments