லண்டன்ல: மெக்சிகோவின் அகாபுல்கோ நகரில் பிப்ரவரி மாதம் மெக்சிகன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது. அதன் ஆடவர் இரட்டையர் பிரிவில் 24வயதான அலெக்சாண்டர் ஸ்வெரவ்(ஜெர்மனி), மார்சிலோ மெலோ(பிரேசில்), இணை லாயட் கிளாஸ்பூல்(பிரிட்டன்), ஹர்ரி ஹெலியோவாரா(பின்லாந்து) இணையிடம் போராடி தோற்றது. நடுவர் தீர்ப்புதான் தோல்விக்கு காரணம் என, ஆத்திரமடைந்த ஸ்வெரவ் கோபத்துடன் திட்டியபடி, தனது டென்னிஸ் மட்டையை நடுவர் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அடித்து உடைத்தார். ஸ்வெரவின் செயல் சர்ச்சையானது. அவர் பின்னர் மன்னிப்பு கேட்டாலும், ஒற்றையர் பிரிவில் இருந்தும் போட்டி நிர்வாகம் அவரை நீக்கியது. விசாரணைக்கு பிறகு ஸ்வெரவுக்கு என்ன தண்டனை என்பது அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்து. இந்நிலையில் ஸ்வெரவ் செயல் குறித்து டென்னிஸ் வீரர்கள் சங்கம்(ஏடிபி) விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் நேற்று, ஸ்வெரவ் 8 வார காலத்துக்கு டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க ஏடிபி தடை விதித்தது. கூடவே தவறாக பேசியதற்கு 20,000 டாலர், நடத்தை விதிகளை மீறியதற்காக 20,000 டாலர், பரிசுத் தொகையில் இருந்து 31,000 டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் மெக்சிகன் ஓபன் போட்டியில் கிடைத்த தரவரிசை புள்ளிகளையும் விதி மீறலால் இழந்துள்ளார். உலக தர வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் இன்று அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் தொடங்கும் பாரிபாஸ் ஓபனில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
from Dinakaran.com |09 Mar 2022 https://ift.tt/QoqHjcs
via IFTTT
0 Comments