மொகாலி: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன் விளாசி சாதனை படைத்தார்.பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன் எடுத்திருந்தது. ரோகித் 29, மயாங்க் 33, கோஹ்லி 45, ஹனுமா 58, ஷ்ரேயாஸ் 27, பன்ட் 96 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். ஜடேஜா 45 ரன், அஷ்வின் 10 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். மறைந்த ஆஸி. சுழல் நட்சத்திரம் ஷேன் வார்னுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர். 7வது விக்கெட்டுக்கு அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா - அஷ்வின் இணை 130 ரன் சேர்த்து அசத்தியது. ஜடேஜா சதம் விளாச, மறு முனையில் அஷ்வின் அரை சதம் அடித்தார். அவர் 61 ரன் (82 பந்து, 8 பவுண்டரி) எடுத்து லக்மல் பந்துவீச்சில் டிக்வெல்லாவிடம் பிடிபட்டார். ஜெயந்த் 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த ஷமி பொறுப்பாக கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய ஜடேஜா இலங்கை பந்துவீச்சை சிதறடித்தார்.இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன் குவித்த நிலையில், முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக ரோகித் அறிவித்தார் (129.2 ஓவர்). ஜடேஜா 175 ரன் (228 பந்து, 17 பவுண்டரி, 3 சிக்சர்), ஷமி 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் லக்மல், விஷ்வா, எம்புல்டெனியா தலா 2, லாகிரு, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்துள்ளது. கேப்டன் கருணரத்னே 28, திரிமன்னே 17, ஏஞ்சலோ மேத்யூஸ் 22, தனஞ்ஜெயா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். நிசங்கா 26 ரன், அசலங்கா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 2, பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கை வசம் 6 விக்கெட் இருக்க, இலங்கை இன்னும் 466 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கபிலின் 35 ஆண்டு சாதனை முறியடிப்புடெஸ்ட் போட்டிகளில் 7வது வீரராகக் களமிறங்கி அதிக ரன் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை கடந்த 35 ஆண்டுகளாக கபில் தேவ் வசப்படுத்தி வைத்திருந்தார். 1986 டிசம்பரில் இலங்கைக்கு எதிராக கான்பூரில் நடந்த டெஸ்டில் கபில் 163 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்நிலையில், மொகலியில் நேற்று ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன் விளாசி கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார். கபில், பன்ட் ஆகியோருக்கு அடுத்து 7வது அல்லது அதற்கும் கீழாகக் களமிறங்கி 150+ ரன் விளாசிய 3வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது. இந்த இன்னிங்சில் அவர் பன்ட், அஷ்வின், ஷமி ஆகியோருடன் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்ததும் குறிப்பிடத்தக்கது.
from Dinakaran.com |06 Mar 2022 https://ift.tt/krBh5g6
via IFTTT
0 Comments