ஜோதிடம்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மும்பையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகிறது. இந்தியாவின் முக்கிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 15வது தொடர் பல புதிய சிறப்பம்சங்களுடன் இன்று தொடங்குகிறது. இந்தமுறை  லக்னோ, குஜராத் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால், மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. மெகா ஏலத்துக்குப் பிறகு அனைத்து அணிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  புதிய கேப்டன்கள், புதிய வீரர்கள், அறிமுக இளம் வீரர்கள் என பலரும் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். மும்பை, ராஜஸ்தான், டெல்லியை தவிர மற்ற அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் போட்டிகளைக் காண 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. மார்ச் 31க்கு பிறகு கொரோனா கட்டுபாடுகள் முடிவுக்கு வர உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாடுவதில் மாற்றமில்லை. முன்பு 55 லீக் ஆட்டங்கள் நடந்தன. இந்த முறை அது 70ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 65 நாட்களில் 70 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் நடக்க உள்ளன.எல்லா ஆட்டங்களும்  மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், டிஒய் பாட்டீல் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன. வான்கடே, டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் தலா 20 போட்டிகள், பிராபோர்ன், எம்சிஏ ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகள் நடத்தப்படுகிறது.பிளே ஆப் சுற்று ஆட்டங்கள், இறுதி ஆட்டம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. லீக் சுற்று ஆட்டங்கள் மே 18ம் தேதியுடன் முடிவடைகிறது.  பைனல் மே 29ல் நடைபெறும். முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா மோதல்மும்பை வான்கடே அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில்  நடப்பு சாம்பியன்  சென்னை, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா மோதுகின்றன. சென்னை அணி இதுவரை 4 முறையும், கொல்கத்தா 2 முறையும் சாம்பியன்களாகி உள்ளன. இம்முறை ஜடேஜா தலைமையில் சென்னையும், ஷ்ரேயாஸ் தலைமையில் கொல்கத்தாவும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பைனலில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.   2020ல் டெல்லி கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் பைனல் வரை அணியை அழைத்துச் சென்றார். அதனால்  கொல்கத்தா அணி மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. தலைமை பொறுப்பில் இருந்து தோனி விலகி, ஜடேஜா பொறுப்பேற்றுள்ளதால் சென்னை மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. நேருக்கு நேர்இரு அணிகளும் 26 முறை மோதியதில்  சென்னை 17-8 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. 2021ல் மோதிய 3 ஆட்டங்களிலும் சென்னை அணியே வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சென்னை 220 ரன், கொல்கத்தா 202 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக சென்னை 114,  கொல்கத்தா 108 ரன்னில் சுருண்டுள்ளன.சிஎஸ்கே ராஜ்ஜியத்தில்...சென்னை இதுரை 12 தொடர்களில் களம் கண்டுள்ளது. அவற்றில் 11தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. அதில் 2020ம் ஆண்டு மட்டும் முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் கூட நுழைய முடியாமல் 7வது இடத்தை பிடித்தது. 9 முறை பைனலுக்குள் நுழைந்து, அதிக முறை பைனலில் விளையாடிய அணி என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளதுடன் 4 முறை கோப்பையையும் வென்று அசத்தியுள்ளது. தமிழக வீரர்கள் நாராயண் ஜெகதீசன், செழியன் ஹரிநிஷாந்த் வாய்ப்பு கிடைத்தால் அசத்தக் காத்திருக்கிறார்கள்.நைட் ரைடர்ஸ் உற்சாகம்புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் கொல்கத்தா அணி உற்சாகமாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் அய்யர், வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர். 2012, 2014ல் கோப்பையை கைப்பற்றிய கேகேஆர், கடந்த ஆண்டு 3வது முறையாக பைனலுக்கு முன்னேறி 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. ஷ்ரேயாஸ், ரஸ்ஸல், சுனில், பிஞ்ச், இந்திரஜித், ராணா, வெங்கடேஷ் என்று அதிரடிக்கு பஞ்சமில்லா பேட்டிங் வரிசை எதிரணி பவுலர்களுக்கு சவாலாக இருக்கும்.விடா முயற்சியில் ராஜஸ்தான்ஐபில் தொடரின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் அணி, இதுவரை 11 தொடர்களில் விளையாடி 3 முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. முதலாவது சீசனில் இறுதிபோட்டிக்கு முன்னேறி கோப்பையையும் கைப்பற்றிய ராஜஸ்தான், அதன் பிறகு சாதிக்க முடியாவிட்டாலும் விடா முயற்சியை தொடர்கிறது. கடந்த முறை 7வது இடம். நடப்பு சீசனில் தமிழக வீரர் அஷ்வின் இணைந்துள்ளது கூடுதல் பலம். சாம்சன், படிக்கல், பட்லர், ஹெட்மயர், ஜெய்ஸ்வால் வெளுத்து வாங்கினால், ராஜஸ்தான் ராஜ நடை போடும் என்பதில் சந்தேகமில்லை.சீறும் டெல்லி கேப்பிடல்ஸ்டெல்லி அணி 13 தொடர்களில் விளையாடி 5 முறை பிளே ஆப் சுற்றில் கால் வைத்துள்ளது. 2020ல் ஷ்ரேயாஸ் தலைமையில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்து, 2வது இடம் பிடித்தது. கடந்த முறை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஷப் பன்ட் இந்த முறையும் கேப்டனாக தொடர்கிறார். வார்னர், பிரித்வி, மிட்செல் மார்ஷ், அக்சர், சர்பராஸ், ஷர்துல் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.ரா...ரா...ராயல் சேலஞ்சர்ஸ்ஒவ்வொரு முறையும் கோப்பை வெல்லும் அணி என்று கணிக்கப்பட்டாலும், பல சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதே கனவானது தான் வரலாறு. கடுமையான விமர்சனம் காரணமாக கேப்டன் பொறுப்பை துறந்துள்ளார் கோஹ்லி. தென் ஆப்ரிக்காவின் டு பிளெஸ்ஸி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்சிபி 7 முறை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 2009, 2011, 2016ல் 2வது இடம் பிடித்தது. தொடர்ந்து 3வது முறையாக கடந்த ஆண்டும் 4வது இடம் கிடைத்தது. ஏகப்பட்ட ஆல் ரவுண்டர்களை வைத்திருக்கும் பெங்களூரு அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பராக இடம் பிடித்துள்ளார்.குஜராத் டைட்டன்ஸ்மற்றொரு அறிமுக அணியான குஜராத்தின் கேப்டனாக மண்ணின் மைந்தன் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஆட்டங்களில் உடல்தகுதியை மட்டுமல்லாது ஆட்டத் திறனையும் நிரூபித்தால்தான் இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பதால், ஹர்த்திக்கிடம் இருந்து ஸ்பெஷலான ஆட்டம் வெளிப்படுவது உறுதி. தமிழக வீரர்கள் விஜய் ஷங்கர், சாய் கிஷோர், சாய் சுதர்சன் ஆகியோருடன் ராகுல் திவேதியா, ரஷீத் கான், ஷமி, பெர்கூசன் என அணியும் வலுவாகவே இருக்கிறது.சன்ரைசர்ஸ் ஐதராபாத் எழுச்சிஐபிஎல் தொடரில் 2013ல் அறிமுகமானது சன்ரைசர்ஸ் ஐதராபாத். இதுவரை விளையாடிய 9 தொடர்களில் 6ல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தொடர்ந்து 5 முறை பிளே ஆப் சுற்றில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. 2016ல் கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்தது. கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்தாலும்,  நடப்பு சீசனில் கேன் வில்லியம்சன் தலைமையில் ஏகப்பட்ட மாற்றத்துடன் களம் காண்பதுடன் வெற்றிகளைக் குவிக்கும் முனைப்புடன் முழுவீச்சில் தயாராகி உள்ளது. தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலம்.பறக்கும் பஞ்சாப் கிங்ஸ்மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு பஞ்சாப் அணிதான் சிறந்த எடுத்துக்காட்டு. எத்தனை மாற்றங்கள் செய்தாலும் கோப்பை மட்டும் கை சேரவில்லை. ராகுலை தக்க வைக்கும் முயற்சி தோற்றதால் மெகா ஏலத்தில் முன்னணி வீரர்களை அள்ளியுள்ளது. அவர்களை வழி நடத்த மயாங்க் அகர்வால் முதல் முறையாக கேப்டனாகி உள்ளார். 2013ல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதுடன், பைனலுக்கும் தகுதி பெற்றது தான் அதிகபட்ச சாதனை. கடந்த முறை 7வது இடத்தை எட்டியது. தமிழக வீரர் ஷாருக்கானை மீண்டும் வாங்கியது கூடுதல் பலம். தவான், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன், ஷாருக் அதிரடி கை கொடுத்தால், இந்த அணியை கட்டுப்படுத்துவது கடினம்.மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம்இதுவரை 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை, அவற்றில் 5 முறை கோப்பையை வசப்படுத்தி உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக மும்பை உள்ளது. இந்த முறை ஹாட்ரிக் சாம்பியன் கனவுடன் களம் காண்கிறது. ரோகித் தலைமையிலான மும்பை அணியில் சூரியகுமார், இஷான், போலார்டு அதிரடி வெற்றிக்கான துருப்புச்சீட்டாக இருக்கும். தமிழக வீரர் முருகன் அஷ்வினும் கவனம் ஈர்க்கிறார்.லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்புது வரவான லக்னோ அணி கே.எல்.ராகுல் தலைமையில் முத்திரை பதிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. மணிஷ் பாண்டே, க்ருணால் பாண்டியா, தீபக் ஹூடா, ஹோல்டர், டி காக், ஸ்டோய்னிஸ், எவின் லூயிஸ் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆவேஷ், சமீரா, மார்க் வுட், பிஷ்னோய் பந்துவீச்சும் இந்த அணிக்கு வலு சேர்க்கிறது. ஒருங்கிணைந்து விளையாடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



from Dinakaran.com |26 Mar 2022 https://ift.tt/divRlMt
via IFTTT

Post a Comment

0 Comments