ஜோதிடம்

மவுன்ட் மவுங்கானுயி: கொரோனா காரணமாக  தள்ளி வைக்கப்பட்ட ஐசிசி மகளிர் ஒருநாள் உலக கோப்பையின் 12வது தொடர் ஒராண்டுக்கு பிறகு  நியூசிலாந்தில் இன்று தொடங்குகிறது. மகளிர் ஒருநாள் உலக கோப்பையை   2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) திட்டமிட்டிருந்தது. ஆனால் 2020ல் கொரோனா பரவல் திவீரமாக இருந்ததால் 2020ல் நடைபெற இருந்த ஆடவர் டி20 உலக கோப்பை போட்டி உட்பட பல்வேறு தொடர்களை ஐசிசி தள்ளி வைத்தது. அதேபோல்  மகளிர் ஒருநாள் உலக கோப்பையும்  2022ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு  ஒத்தி வைக்கப்படும் என்று 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா உட்பட 8 நாடுகள் பங்கேற்கும் 12வது  ஐசிசி ஒருநாள்  மகளிர் உலக கோப்பை இன்று தொடங்குகிறது.  நியூசிலாந்தின் வெலிங்டன், ஆக்லாந்து, கிறைஸ்ட் சர்ச், மவுன்ட் மவுங்கானுயி, டூனேடின், ஹாமில்டன் என 6 நகரங்களில் போட்டிகள் நடக்கும். போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும்  லீக் சுற்றில் மற்ற அணியுடன் தலா ஒருமுறை விளையாட வேண்டும்.  லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.லீக் சுற்று ஆட்டங்கள் மார்ச் 27ம் தேதி முடியும்.  அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 30, 31 தேதிகளில் வெலிங்டன், கிறைஸ்ட்சர்ச் நகரங்களில் நடக்கும். இறுதி ஆட்டம்  ஏப்.3ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில்  நடைபெறும். மவுன்ட் மவுங்கானுயில் இன்று தொடங்கும் முதல் ஆட்டத்தில் நியூசி-வெ.இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா கட்டுபாடுகள் உள்ளதால் 10 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதி. அவர்களும் உரிய  சோதனைக்கு  பிறகே அரங்கில் அனுமதிக்கப்படுவர். இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நாளை  மறுதினம் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.  இந்திய மகளிர் விளையாடும் ஆட்டங்கள் எல்லாம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும். மற்ற அணிகள் விளையாடும் சில ஆட்டங்கள் அதிகாலை 3.30 மணிக்கும் ஆரம்பிக்கின்றன.பங்கேற்கும் நாடுகள் இந்தியா இதுவரை 9 உலக கோப்பைகளில் விளையாடிய இந்தியா , 3 முறை உலக கோப்பை போட்டிகளை நடத்தியுள்ளது. அவற்றில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை.   ஆனால், 2005, 2017ம் ஆண்டு, 2 முறை  இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர 6முறை  3,4வது  இடங்களை பிடித்துள்ளது. கடந்த முறை வெறும் 9 ரன் வித்தியாசத்தில் கோப்பையை இழந்த மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த முறை கோப்பையுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளது. காரணம் மிதாலி, ஜூலன் போன்ற மூத்த வீராங்கனைகளுக்கு இதுதான் கடைசி உலக கோப்பை.வங்கதேசம்இப்போதுதான் முதல் முறையாக உலக கோப்பையில் விளையாட வங்கதேச மகளிர் தகுதிப் பெற்றுள்ளனர்.இங்கிலாந்துநடப்பு சாம்பியன்  இங்கிலாந்து இதுவரை எல்லா உலக கோப்பைகளிலும் விளையாடி உள்ளது. இங்கிலாந்து   4 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது.  கூடவே தலா 3முறை 2, 3வது  இடங்களை பிடித்துள்ளது.  நியூசிலாந்துஎல்லா உலக கோப்பைகளிலும் ஆடியுள்ள நியூசிலாந்து அணி,   சொந்தமண்ணில் 2000ம் ஆண்டு  சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  இதுதவிர 2 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. மேலும்,  6முறை  3, 4வது இடங்களை பிடித்துள்ளன. இந்த முறை போட்டியை நடத்துவதால் சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை வெல்லும் நம்பிக்கையில் உள்ளது.வெஸ்ட் இண்டீஸ்உலக கோப்பையில்  6 முறை களம் கண்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ். அவற்றில் 2013ம் ஆண்டு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய வெ.இண்டீஸ் 114ரன் வித்தியாசத்தில் ஆஸியிடம் தோற்றது.தென் ஆப்ரிக்காஇந்த அணி 1997ம் ஆண்டு முதல் உலக கோப்பையில் விளையாடுகிறது. இதுவரை விளையாடிய 6 உலக கோப்பைகளில் 2 முறை அரையிறுதிக்கும், ஒருமுறை காலிறுதிக்கும் தென் ஆப்ரிக்கா முன்னேறியதே அதிகபட்ச சாதனை.பாகிஸ்தான்இதுவரை 4 உலக கோப்பைகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான், 2009ம் ஆண்டு  ஒருமுறை மட்டும் அதிகபட்சமாக 5வது  இடத்தை பிடித்தது.ஆஸ்திரேலியாஆடவர் அணியை போல்,  ஆஸி மகளிர் அணியினரும்  உலக கோப்பையில் அசத்தி வந்துள்ளனர். ஆஸி இதுவரை நடந்த 11 உலக கோப்பைகளிலும் பங்கேற்று 6 முறை கோப்பையை முத்தமிட்டுள்ளது. கூடவே 2 முறை 2வது இடத்தையும்,  ஒருமுறை 3வது இடத்தையும், 2முறை 4வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக ஆஸி திகழ்கிறது.டிக்கெட் விற்பனைகொரோனா பரவல் காரணமாக நியூசிலாந்தில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.  வெளி அரங்கில் நடக்கும் போட்டிகளை காண அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.  கூடுதல் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இப்போது நியூசிலாந்து நல்வாழ்வுத்துறை அமைச்சகம்  ஏற்கனவே இருந்த விதியை தளர்த்தி,  உலக கோப்பை ஆட்டங்களுக்கு 10சதவீத ரசிகர்களை அனுமதிக்க  உத்தரவிட்டுள்ளது. அதனால் முதல் 7 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை  நேற்று முன்தினம் தொடங்கியது.9 பேருடன் ஆட்டம்ஒவ்வொரு அணியிலும் 15 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.  ஒரே நேரத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால்  ஆடும் அணியில் 11 பேருக்கு பதில் தற்காலிகமாக 9 பேருடன் விளையாடும் திட்டமும்  போட்டி நிர்வாகத்திடம் உள்ளது. கூடவே புதிதாக மாற்று வீராங்கனைகளை சேர்த்துக் கொள்ளவும்  அணிகளை அனுமதிக்க உள்ளனர்.தகுதி இல்லைஏற்கனவே பல உலக கோப்பைகளில் விளையாடி உள்ள  இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து,  டென்மார்க் ஆகிய நாடுகள்  இந்த உலக கோப்பைக்கு தகுதிப் பெறவில்லை.முதல் உலக கோப்பையில் பங்கேற்ற  ஜமைக்கா, டிரினிடாட்-டொபாகோ ஆகிய நாடுகள் ஆண்டிகுவா உட்பட பல்வேறு நாடுகளுடன் இணைந்து  மேற்கு இந்திய தீவுகள்(வெஸ்ட் இண்டீஸ்) என்ற பெயரில் ஒன்றாக களம் காணுகின்றன.



from Dinakaran.com |04 Mar 2022 https://ift.tt/vDHwZdU
via IFTTT

Post a Comment

0 Comments