ஜோதிடம்

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், அபாரமாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் நடப்பு சீசனில் 3வது சதமடித்து அசத்தினார். வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பட்லர், படிக்கல் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். அமர்க்களமாக விளையாடி டெல்லி பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 15 ஓவரில் 155 ரன் சேர்த்து மிரட்டியது.பட்லர் 36 பந்தில் அரை சதம் அடிக்க, படிக்கல் 31 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். படிக்கல் 54 ரன் (35 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கலீல் அகமது பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து, பட்லருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்தார். இருவரும் டெல்லி பந்துவீச்சை அடித்து நொறுக்க, ஸ்கோர் ஏவுகணையாய் சீறியது. பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர் 57 பந்தில் சதம் அடித்தார். நடப்பு சீசனில் அவர் விளாசிய 3வது சதம் இது. மறு முனையில் சாம்சனும் தன் பங்குக்கு அதிரடி காட்டி டெல்லியை மிரள வைத்தார்.பட்லர் 116 ரன் (65 பந்து, 9 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி முஸ்டாபிசுர் வேகத்தில் வார்னர் வசம் பிடிபட்டார். ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது. நடப்பு சீசனில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது. ராஜஸ்தான் இன்னிங்சின் முதல் 30 பந்தில் 29 ரன்னும், அடுத்த 90 பந்தில் 193 ரன்னும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சாம்சன் 46 ரன் (19 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 223 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது.



from Dinakaran.com |23 Apr 2022 https://ift.tt/RAL76E3
via IFTTT

Post a Comment

0 Comments