ஜோதிடம்

லண்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட்டின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 141 ரன்னில் ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 9 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 56 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், டேரில் மிட்செல் - டாம் பிளண்டெல் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்து அசத்தியது. டேரில் 108 ரன் (203 பந்து, 12 பவுண்டரி), பிளண்டெல் 96 ரன் (198 பந்து, 12 பவுண்டரி), டிம் சவுத்தீ 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 285 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 277 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 69 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணற, நியூசிலாந்து கை ஓங்கியது. ஆனால், ஜோ ரூட் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணைந்து 5வது விக்கெட்டுக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களைப் பிரிக்க முடியாமல் நியூசி. பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்க, இங்கிலாந்து இலக்கை நோக்கி உறுதியுடன் முன்னேறியது.ரூட் - ஸ்டோக்ஸ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஸ்டோக்ஸ் 54 ரன் (110 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 77 ரன், பென் போக்ஸ் 9 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.போக்ஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ரூட் டெஸ்ட் போட்டிகளில் தனது 26வது சதத்தை விளாசி அசத்தினார். இங்கிலாந்து 78.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 279 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ரூட் 115 ரன் (170 பந்து, 12 பவுண்டரி), போக்ஸ் 32 ரன்னுடன் (92 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் ஜேமிசன் 4, போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். ஜோ ரூட் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் நாட்டிங்காமில் ஜூன் 10ம் தேதி தொடங்குகிறது.



from Dinakaran.com |06 Jun 2022 https://ift.tt/08xQWZB
via IFTTT

Post a Comment

0 Comments