பெங்களூர்: இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான கடைசி போட்டி மழையால் ரத்தானதால், டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. தென் ஆப்ரிக்க அணியில் டெம்பா பவுமா காயம் காரணமாக பங்கேற்காததால், கேசவ் மகராஜ் கேப்டன் பொறுப்பேற்றார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சேகவ் மகராஜ் பீல்டிங் தேர்வு செய்தார். மழை காரணமாக, 45 நிமிடங்கள் தாமதமாக போட்டி தொடங்கியது. இதனால், 19 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இந்திய அணியில் இஷான் கிசன், ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேசவ் மகாராஜ் வீசிய முதல் ஓவரில் இஷான் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். ஆனால், நிகிடி வீசிய அடுத்த ஓவரிலேயே இஷான் (15 ரன்) ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து, நிகிடி தனது அடுத்த ஓவரில் கெய்க்வாட் (10) விக்கெட்டையும் கைப்பற்றினார். அப்போது மீண்டும் மழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. இந்திய அணி 3.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்களுடன் இருந்தது. ரிஷப் பண்ட் 1, ஸ்ரேயாஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரவு 9.50 மணியை தாண்டியும் தொடர்ந்து கனமழை பெய்ததால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால், இத்தொடர் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வியின்றி சமனில் முடிந்தது.
from Dinakaran.com |20 Jun 2022 https://ift.tt/CaziYle
via IFTTT
0 Comments