ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 13 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தவான் - கேப்டன் ராகுல் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தனர். ராகுல் 30 ரன், தவான் 40 ரன் எடுத்து எவன்ஸ் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அபாரமாக விளையாடி ஷுப்மன் கில் - இஷான் கிஷன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 140 ரன் சேர்த்தது. இஷான் 50 ரன் எடுத்து (61 பந்து, 6 பவுண்டரி) ரன் அவுட்டானார். ஹூடா 1, சாம்சன் 15, அக்சர் 1 ரன்னில் வெளியேற, கில் 130 ரன் (97 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி எவன்ஸ் வேகத்தில் இன்னொசென்ட் வசம் பிடிபட்டார். ஷர்துல் 9 ரன்னில் வெளியேற, இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. தீபக் சாஹர் 1, குல்தீப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் எவன்ஸ் 5 (10-0-54-5), விக்டர், ஜாங்வே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 49.3 ஓவரில் 276 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஷான் வில்லியம்ஸ் 45, எவன்ஸ் 28, கேப்டன் சகாப்வா 16, டோனி முன்யோங்கா 15, லூக் ஜாங்வே 14 ரன்னில் ஆட்டமிழந்தனர். உறுதியுடன் போராடி சதம் அடித்த சிக்கந்தர் 115 ரன் (95 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஷர்துல் பந்துவீச்சில் கில் வசம் பிடிபட்டார். சிக்கந்தர் - எவன்ஸ் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் ஆவேஷ் 3, சாஹர், குல்தீப், அக்சர் தலா 2, ஷர்துல் 1 விக்கெட் எடுத்தனர். இந்தியா 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது.
from Dinakaran.com |23 Aug 2022 https://ift.tt/PCHB5nd
via IFTTT
0 Comments