துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கி உள்ளன. ஏ பிரிவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் இன்றைய லீக் ஆட்டம், உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது.கொரோனாவால் ஓய்வில் உள்ள ராகுல் டிராவிடுக்கு பதிலாக, இந்திய அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லஷ்மன் பொறுப்பு ஏற்றுள்ளார். துணை கேப்டன் ராகுல், நீண்ட நாட்களுக்கு பிறகு களம் காணும் முன்னாள் கேப்டன் கோஹ்லி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பார்மை இழந்து தவித்து வரும் கோஹ்லி கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஜடேஜா, கார்த்திக், ஹர்திக், பன்ட், சூரியகுமார் என்று அதிரடி வீரர்கள் அணிவகுப்பதால், இந்திய பேட்டிங் வரிசை மிரட்டலாக அமைந்துள்ளது. அஷ்வின், சாஹல் சுழல் கூட்டணியும் எதிரண பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.காயம் காரணமாக முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஷாகீன் ஷா அப்ரிடி இடம் பெறாதது இரு அணிகளுக்குமே பின்னடைவை கொடுத்துள்ளது. அரசியல் காரணங்களால் இருதரப்பு தொடர்கள் சாத்தியமாகாத நிலையில் ஆசிய கோப்பை, உலக கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இது போன்ற போட்டிகளில் பெரும்பாலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு துபாயில் நடந்த டி20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாக். அணி இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. அந்த தோல்விக்கு பதிலடி தரும் முனைப்பில் இந்தியா இன்று கூடுதல் வேகம் காட்டும்.
from Dinakaran.com |28 Aug 2022 https://ift.tt/vYHMwOf
via IFTTT
0 Comments