* ஷமிக்கு இடமில்லையா! ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் தந்துள்ளனர். இது குறித்து முன்னாள் வீரர் மதன் லால், ‘இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர் ஷமி. அதுவும் ஆஸ்திரேலிய களங்களில் அவர் முக்கியமான பந்துவீச்சாளராக இருப்பார். அப்படியிருக்க, அவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்பது புரியவில்லை. முதல் 3 ஓவர்களில் விக்கெட் எடுக்கும் திறமை பெற்றவர் ஷமி’ என்று கூறியுள்ளார். முதன்மை அணியில் ஷமி சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். * துரந்த் அரையிறுதி துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்கள் முடிந்து விட்டன. அரையிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் கொல்கத்தாவில் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் முகமதன் எஸ்டி - மும்பை சிட்டி எப்சி அணிகள் களம் காணுகின்றன. நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதியில் பெங்களூர் எப்சி - ஐதராபாத் எப்சி அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி செப்.18ம் தேதி கொல்கத்தாவிலேயே நடக்க உள்ளது.* லாபம் குறைந்ததுஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப்களில் ஒன்று ரியல் மாட்ரிட். உள்ளூரில் லா லிகா தொடர், ஐரோப்பிய அளவில் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் விளையாடும் ரியல் மாட்ரிட், சமீபத்தில் 2021-22 சீசனுக்கான வரவு, செலவு கணக்கை வெளியிட்டது. அதன்படி வீரர்கள் ஊதியம் உட்பட இதர செலவினங்கள் போக இந்திய மதிப்பில் ரூ.104.53 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. கொரோனா பரவலால் தான் லாபம் குறைந்து விட்டதாக அணி நிர்வாகம் வருத்தப்பட்டுள்ளது.* தந்தை வழியில்....இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் இப்போது வர்ணனையாளராக இருப்பதுடன் அவ்வப்போது போட்டிகள், வீரர்கள் குறித்து கருத்து சொல்வார். சில சமயம் சர்ச்சைகளை கிளப்பி விமர்சனத்துக்குள்ளாவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், அவரது மகன் ரோகன் கவாஸ்கரும் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளார். அதன் முதல்படியாக, ‘வரும் உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் தொடக்க வீரராக விராத் கோஹ்லி களம் இறங்குவது சிறந்த வாய்ப்பாக இருக்கும். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவதை தியாகம் செய்து அடுத்த வரிசையில் களம் இறங்கலாம்’ என்று கூறியுள்ளார்.* 10 விநாடிக்கும் குறைவாக!இந்தியாவின் அதிவேக மனிதர் அம்லன் போர்கோஹைன் (24 வயது). சமீபத்தில் நடந்த 87வது அகில இந்திய ரயில்வே தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டரை 10.25 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். அடுத்து 100 மீட்டரை 10 விநாடிக்கும் குறைவாக கடக்கும் பயிற்சியில் இருக்கிறார். இது குறித்து அவரது பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியர் கூறுகையில், ‘இந்திய ஓட்டப் பந்தய வீரர்கள் உடலை மேம்படுத்துவதில் காட்டும் கவனத்தை சிறப்பு பயிற்சிகளில் காட்டுவதில்லை. அந்த சிறப்பு பயிற்சிகள் மூலம் நீங்கள் வேகம் பெற முடியும்’ என்று கூறியுள்ளார். ஜேம்ஸ் பயிற்சி அளித்த பிறகு அம்லன் 100 மீட்டர் தொலைவை 10.90 விநாடிகளில் இருந்து 10.25 விநாடிகளாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.* கவுன்டியில் கலக்கிய சிராஜ்இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில், வார்விக்ஷயர் அணிக்காக தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய இந்திய வேகம் முகமது சிராஜ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் சாமசெட் அணிக்கு எதிராக நடக்கும் இப்போட்டியில், அபாரமாகப் பந்துவீசிய அவர் 24 ஓவரில் 6 மெய்டன் உள்பட 82 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். சாமர்செட் முதல் இன்னிங்சில் 65.4 ஓவரில் 219 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. * ட்வீட் கார்னர்...விரைவில் சந்திப்போம்!ருமேனியா டென்னிஸ் நட்சத்திரம் சிமோனா ஹாலெப், மூக்கின் உள்ளே ஏற்பட்ட பிரச்னைக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஓய்வு எடுத்து வருகிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் பதிந்துள்ள தகவலில், ‘நீண்ட நாட்களாகவே மூக்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்தேன். இதனால் மூச்சுவிடவே சிரமமாக இருந்தது. குறிப்பாக, இரவு நேரங்களில் முழுவதுமாக மூக்கடைப்பு ஏற்பட்டு மரண வேதனையாக இருக்கும். ஆபரேஷனுக்கு பிறகு நலமாக உள்ளேன். கூடவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்துகொள்ள முடிந்தது. மருத்துவ குழுவினருக்கு நன்றி. விரைவில் டென்னிஸ் களத்தில் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.* ஆசிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்புஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஆசிய கோப்பை டி20 தொடரில், இலங்கை அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. தொடக்க லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய அந்த அணி, அதன் பிறகு அபாரமாக விளையாடி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைக் குவித்து கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய இலங்கை அணி வீரர்களுக்கு நேற்று தலைநகர் கொழும்புவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
from Dinakaran.com |14 Sep 2022 https://ift.tt/UZi37pC
via IFTTT
0 Comments