பெற்றோர்களை பொறுத்தவரை தான் பெற்ற பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். நல்ல வேலையில் சேர வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் மட்டுமே உள்ளனர். அதற்காக, பணம் செலவு செய்து பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர். ஆனால் மாணவர்களில் சிலர் நாகரிக வளர்ச்சியின் காரணமாக செல்போனில் மூழ்கி படிப்பை தொடர முடியாமல் வாழ்க்கையை தொலைக்கின்றனர். மேலும் ஒரு சிலர் கஞ்சா, மது போன்ற தீய பழக்க வழக்கங்களாலும் தங்கள் வாழ்க்கையை தொலைப்பதோடு பெற்றோரின் நிம்மதியையும் கெடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களில் சிலர் மட்டுமே தங்களது லட்சியப்பாதையை நோக்கி பயணிக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் திருவள்ளூரில் 10ம் வகுப்பு பயிலும் மாணவன் தனுஷ். உலக அளவில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்ததோடு ஆசிய அளவில் நடைபெறும் போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் எனக்கூறி அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் தனுஷ் (16), தற்போது திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். லோகநாதன் சிறு வயதில் பளு தூக்குவதில் ஆர்வம் ஏற்பட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் வறுமை காரணமாக போதிய உணவு வகைகளை சாப்பிட முடியாமல், வேலைக்கு சென்றுதான் குடும்பத்தை காப்பாத்த வேண்டிய நிலை இருந்தது. இதனால் கனவை மறந்து தனது வாழ்க்கையை வாழத் தொடங்கினார். லோகநாதனுக்கு திருமணமாகி முதலில் பெண் குழந்தையும், இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது. பிள்ளைகள் இருவரும் வளர்ந்ததும் மகனை பளு தூக்கும் போட்டியில் பங்குபெறச் செய்து சாதனை படைக்க வேண்டும் என்றும், தன்னால் முடியாத கனவை பிள்ளைகள் மூலம் அடைய வேண்டும் என்றும் லோகநாதன் எண்ணினார். இதன் காரணமாக, மகள் யமுனா மற்றும் மகன் தனுஷ் ஆகிய இருவருக்கும் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியை அளித்து வந்துள்ளார். மகன் தனுசுக்கு 10 வயது இருக்கும்போதே பளு தூக்குவதற்கு தான் பயன்படுத்திய ஷூ முதல் அனைத்து உபகரணங்கள் மூலம் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதில் மகனும் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளார். இந்நிலையில், திருவள்ளூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் பயிற்சிக்கு சேர்த்துள்ளார். இவர், 1990ல் காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்ததை தொடர்ந்து, முதல்வர் கையால் விருதும், ஜனாதிபதி கையால் அர்ஜூனா விருதும் பெற்றவர். அதேபோல், 1996ல் ஒலிம்பிக்கில் பங்கேற்று அதிலும் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், பெரியகுப்பம் பகுதியில் டைகர் ஜிம் என்ற பெயரில் உள்ள மையத்தில் பயிற்சிக்காக மகனை சேர்த்துள்ளார். தனுசுக்கு தேசிய வீரர் மோகனசுந்தரம் என்பவரும் பயிற்சி அளித்து வருகிறார். பளு தூக்குவதில் சாதனை படைக்க வேண்டும், தந்தையின் கனவை நனவாக்க வேண்டும் என்று விரும்பி அதற்கான முறையான பயிற்சி பெற்று வந்தார் தனுஷ். கடந்த ஆண்டு 49 கிலோ எடைப் பிரிவில் கோவில்பட்டி மற்றும் கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று தனுஷ் சாதனை படைத்துள்ளார். அதேபோல், தேசிய அளவில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் அரியானாவில் நடந்த கேல் இண்டியா போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் உஸ்பெகிஸ்தானில் நடந்த போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் 3ம் பரிசான வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து, அடுத்து நடைபெற உள்ள ஆசியப் போட்டியில் பங்குபெற வேண்டும் என்பதால் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் ஹவுரங்காபாத்தில் அரசு சார்பில் தனுசுக்கு பயிற்சி அளித்து வருவதால் அங்கு பயிற்சி பெற்று வருகிறார். தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழக கவர்னர் விருது வழங்கும் பாராட்டும் நிகழ்ச்சியில் தனுஷ் சார்பாக லோகநாதன் மற்றும் தாய் மேனகா ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.மாணவன் தனுஷ் கூறுகையில், ‘‘அடுத்த ஆசிய பளு தூக்கும் போட்டி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தற்போது தீவிர பயிற்சி பெற்று வருகிறேன். தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்’’ என பெருமிதத்துடன் தெரிவித்தார். ஆனால், வெளிநாடுகளுக்கு சென்று போட்டியில் பங்குபெற தமிழக அரசு சார்பில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவிகளை செய்தால் எளிதில் சாதனை படைக்க முடியும் என தனுஷின் தந்தை லோகநாதன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வறுமையின் காரணமாக தன்னால் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைக்க முடியாமல் போனாலும் அதனை தனது மகன் மூலம் நிறைவேற்ற காத்திருக்கிறார் தந்தை. *சகோதரியும் சாதனைலோகநாதன் தனது மகனுக்கு மட்டுமல்ல, தனது மூத்த மகளான யமுனாவையும் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக பயிற்சியை அளித்து வந்துள்ளார். அதனால் யமுனாவும் மாநில அளவிலான பெண்கள் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர் சோழிங்கநல்லூரில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.
from Dinakaran.com |12 Sep 2022 https://ift.tt/Iua2mCn
via IFTTT
0 Comments