* ‘பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஆசிய கோப்பை தொடரில் விலையாடுவதற்காக இந்திய அணி அங்கு செல்லாது. அந்த தொடர் நடுநிலையான வேறு இடத்துக்கு மாற்றப்படும்’ என்று பிசிசிஐ செயலரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவருமான ஜெய்ஷா கூறியதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த பிரச்னை தொடர்பாக விவாதிக்க ஏசிசி அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என கோரியுள்ளது.* டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை நேற்று தனது முதல் சுற்றில் கொரியாவின் காங் மின் ஷூயூக் - சியோ செவுங் ஜோ ஜோடியை 44 நிமிடங்களில் 21-15, 21-19 என நேர் செட்களில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.* சென்னை பல்லைக்கழக ஏ மண்டலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டி நடந்தது. தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற இந்த தொடரின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி 6-0, 6-0 என நேர் செட்களில் ஜேபாஸ் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் ராணி மேரிக் கல்லூரி 3வது இடத்தை பிடித்தது.* சென்னை கண்ணகி நகரில் சென்னை மாநகராட்சி, தமிழ் நாடு காவல்துறை இணைந்து தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் புதிய விளையாட்டு வளாகத்தை தொடங்கியுள்ளன.* பிரிஸ்பேனில் நேற்று ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆப்கான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. இப்ராகிம் ஸத்ரன் 35, கேப்டன் முகமது நபி 51* ரன், உஸ்மான் கானி 32* ரன் விளாசினர். தொடர்ந்து விளையாடிய பாக். 2.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.* சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் எலைட் இ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு, இதுவரை ஆடிய 5 ஆட்டங்களில் 3ல் வெற்றியும், 2ல் தோல்வியையும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தனது கடைசி ஆட்டத்தில் இன்று சண்டீகரை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுவதுடன் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வென்றால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட தமிழ்நாடு அணிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.* ஸ்பெயினின் பொன்டேவேட்ரா நகரில் யு-23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதன் 77 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சஜன் பஹன்வால் பங்கேற்றார். அரையிறுதியில் நூலிழையில் தோற்ற அவர் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் உக்ரைன் வீரர் திமித்ரோ வசேட்ஸ்கியை எதிர்கொண்டார். ஆட்டம் 10-10 என சம புள்ளிகளில் முடிந்தாலும் கடைசி புள்ளியை பெற்றவர் சஜன் என்பதால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. அதன் மூலம் யு-23 உலக சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை சஜன் படைத்துள்ளார்.* இங்கிலாந்து அணி வேகப் பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லி (28 வயது) கணுக்கால் காயம் காரணமாக உலக கோப்பை டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த தைமல் மில்ஸ் சேர்க்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.* புரோ கபடி லீக் தொடரில் யு.பி.யோதாஸ் அணியுடன் நேற்று மோதிய குஜராத் டைட்டன்ஸ் அணி 51-44 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றது.
from Dinakaran.com |20 Oct 2022 https://ift.tt/Bm5FuLe
via IFTTT
0 Comments