அடிலெய்டு: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் 2வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. கிரிக்கெட்டின் புதிய அவதாரமாக உருவெடுத்த டி20 போட்டிக்கான முதலாவது உலக கோப்பை தொடர் 2007ல் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. அந்த தொடரின் பைனலில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்ட தோனி தலைமையிலான இந்திய அணி அபாரமாக வென்று முதல் சாம்பியனாக முத்திரை பதித்தது. இங்கிலாந்து அணி 2010ல் உலக டி20 சாம்பியனாக முடிசூடியது.இரு அணிகளுமே அதன் பிறகு மீண்டும் உலக கோப்பையை முத்தமிட முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அடிலெய்டில் இன்று நடக்கும் 2வது அரையிறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் பார்முக்கு திரும்பி இருப்பதுடன் ‘மிஸ்டர் 360’ சூரியகுமார், கோஹ்லி ஆகியோர் தொடர்ந்து அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பயிற்சியின்போது காயமடைந்த கேப்டன் ரோகித் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், ஹூடா அல்லது தினேஷுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். பந்துவீச்சில் சிறப்பாக பங்களிக்கும் அஷ்வின், புவி, ஷமி, அக்சர், அர்ஷ்தீப் என அதே வரிசை களம் காணக் கூடும். இங்கிலாந்து அணியிலும் மலான் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவுதான் என்றாலும்... ஸ்டோக்ஸ், பட்லர், லிவிங்ஸ்டன், மொயீன், வோக்ஸ், சாம் கரன் என வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது. கூடவே மார்க் வுட், அடில் ரஷீத், கிறிஸ் ஜார்டன், தைமல் மில்ஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். இரு அணிகளுமே பைனலுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் வரிந்துகட்டுவதால், ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
from Dinakaran.com |10 Nov 2022 https://ift.tt/HNIsez2
via IFTTT
0 Comments