டாக்கா: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட்டை வென்ற இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து 2வது டெஸ்ட் டாக்காவில் டிச.22ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் வங்கம் 227 ரன்னிலும், இந்திய 314 ரன்னிலும் ஆட்டமிழந்தன.தொடர்ந்து 87 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கம் 3வது நாளான சனிக்கிழமை 70.2ஒவரில் 231ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனையடுத்து 145ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. கைவசம் 2நாட்களும், சுமார் 25 ஓவர்களும் மிச்சமிருந்ததால் இந்தியா எளிதில் வென்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் 23ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 45ரன் மட்டுமே எடுத்தது.களத்தில் இருந்த அக்சர் 26, ஜெயதேவ் 3 ரன்னுடன் 4வது நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். வெற்றிக்கு இன்னும் 100 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் அக்சர் 34 , ஜெயதேவ் 13 , ரிஷப் 9 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அப்போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 74ரன் தான் எடுத்திருந்தது. அதனால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறி ஆனது. அப்போது இணை சேர்ந்த ஸ்ரேயாஸ், அஷ்வின் ஆகியோர் வங்கத்தின் பந்துகளை சிதறடித்து வெற்றியை உறுதி செய்தனர். அதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட இந்தியா 47ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145ரன் என்ற இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அஷ்வின் 42, ஸ்ரேயாஸ் 29 ரன்னுடன் களத்தில் இருந்தனர். வங்க வீரர்கள் மெஹதி ஹசன் 5 விக்கெட்களை அள்ள, கேப்டன் ஷாகிப் 2விக்கெட் எடுத்தார். மொத்தம் 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கத்தை ஒயிட் வாஷ் செய்தது. கூடவே ஒருநாள் தொடரை வங்கத்திடம் 2-1 என்ற கணக்கில் இழந்த இந்தியா, டெஸ்ட் தொடரை வென்று பதிலடி கொடுத்தது.நாயகன்கள்: இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 12ரன், 4 விக்கெட், 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 42ரன், 2விக்கெட் சேர்த்து வெற்றிக்கு காரணமான அஷ்வின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கூடவே 2 டெஸ்ட்களிலும் ஒரு சதம் உட்பட 222ரன் விளாசி ரன் குவிப்பிலும் முதலிடம் பிடித்த புஜாரா தொடர் நாயகன் விருது பெற்றார்.8வது விக்கெட்டில் சாதனைஅஷ்வின்-ஸ்ரேயாஸ் இணை 8வது விக்கெட்டுக்கு 71ரன் சேர்த்தது. இது இந்திய டெஸ்ட் வரலாற்றில் 8வது விக்கெட்டுக்கு இந்திய இணை சேர்த்த 2வது அதிகபட்ச ரன்னாகும். இதற்கு அமர்சிங்-லால்சிங் இணை 1932ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சேர்த்த 74ரன் முதல் இடத்தில் உள்ளது. கூடவே 1985ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கபில்தேவ்-எல்.சிவராமகிருஷ்ணன் இணை சேர்ந்த 70 ரன் 3வது இடத்தில் இருக்கிறது.2வது இடத்தில் இந்தியாவங்கத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வென்ற இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியது. இப்போது 2வது டெஸ்ட்டையும் வென்று தொடரை கைப்பற்றிய பிறகு 3 இடத்தில் இருந்து 2வது இடத்தை பிடித்து உள்ளது.தொடரும் வரலாறுவங்கதேசத்துக்கு எதிராக 2000ம் ஆண்டு முதல் இதுவரை 13 டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா விளையாடி உள்ளது. அவற்றில் 11 ஆட்டங்களில் இந்தியா வென்றுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன. ஆக டெஸ்ட் ஆட்டங்களில் வங்கத்திடம் தோற்றதில்லை என்ற வரலாறை இந்தியா தொடர்கிறது.உலக கால்பந்து நட்சத்திரம் பீலே(82, பிரேசில்) சுவாச தொற்று நோய் காரணமாக நவ.29ம்தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கூடவே இதயம், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தினமான நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பீலேயை பிள்ளைகள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். இந்நிலையில், தனது தந்தையை அரவணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவரது மூத்த மகள், ‘எங்கள் தந்தை தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். பிரான்ஸ் வீரர் கிலியம் எம்பாபே, ‘நம் ராஜா(பீலே)வுக்காக பிரார்த்தனை செய்வோம்’ என்று ரசிகர்களையும், வீரர்களையும் வலியுறுத்தியுள்ளார்.* ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. இந்தியா வீரர், வீராங்கனைகள் நேற்று மாலை வரை 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்று முன்னிலையில் உள்ளது.* பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் இன்று முதல் டிச.30ம் தேதி வரையிலும், 2வது டெஸ்ட் ஜன.2 முதல் ஜன.6ம் தேதி வரையிலும் நடைபெறும். தொடர்ந்து ஒருநாள் ஆட்டங்கள் ஜன.9, 11, 13 தேதிகளில் நடத்தப்படும். இந்த எல்லா ஆட்டங்களும் கராச்சியில் மட்டும் நடைபெறும். இந்த தொடர் முடிந்ததும் நியூசிலாந்து அணி இந்தியா வர உள்ளது.அஷ்வினை சீண்டிய ராகுல்வங்கதேசத்துக்கு எதிரான தொடர் வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ராகுல்,‘புதிய பந்தை எதிர்கொள்வதுதான் சிரமம். பந்து மென்மையாக மாறிய பிறகு ரன் எடுப்பது எளிதாக இருந்தது. புதிய பந்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதுதான் முக்கியம்’ என்று கூறினார். அதன் மூலம் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு காரணமான அஷ்வினை சீண்டினார். இப்படி அஷ்வினை பாராட்டாமல் தொடர்ந்து சுமாராக விளையாடி வரும் கேப்டன் ராகுல் குறை கூறியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
from Dinakaran.com |26 Dec 2022 https://ift.tt/r8m5yju
via IFTTT
0 Comments