கராச்சி: பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்டில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது. தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 304 ரன்னும், இங்கிலாந்து 354 ரன்னும் எடுத்து ஆல் அவுட்டாகின. 50 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 216 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் பாபர் ஆஸம் 54, ஷகீல் 53, அப்துல்லா 26, ஷான் மசூத் 24, ஆஹா சல்மான் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் அறிமுக ஸ்பின்னர் ரெஹான் அகமது (18 வயது) 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஜாக் லீச் 3, ஜோ ரூட், மார்க் வுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்திருந்தது. பென் டக்கெட் 50 ரன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 10 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்க்க, இங்கிலாந்து 28.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து வென்றது. டக்கெட் 82 ரன் (78 பந்து, 12 பவுண்டரி), ஸ்டோக்ஸ் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இங்கிலாந்து 3-0 என தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. பாகிஸ்தான் மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் வென்ற முதல் வெளிநாட்டு அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. அந்த அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை இங்கிலாந்தின் ஹாரி புரூக் தட்டிச் சென்றார்.
from Dinakaran.com |21 Dec 2022 https://ift.tt/jPM3hc6
via IFTTT
0 Comments