ஜோதிடம்

கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பரபரப்பான பைனலில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியுடன் மோதிய அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. 90 நிமிட ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்ததால், கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டதில், அதிலும் 3-3 என இழுபறி நீடித்தது. இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டதில், அர்ஜென்டினா வெற்றியை வசப்படுத்தியது.இந்த போட்டியில் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே அபாரமாக அடித்த ஹாட்ரிக் கோல் வீணான நிலையில், மெஸ்ஸியின் மேஜிக் அர்ஜென்டினா அணியின் 36 ஆண்டு கனவை நனவாக்கியது. கால்பந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த பைனலில் ஆட்ட நாயகன் விருது, தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருது என ஸ்பாட்லைட் முழுவதையும் தனது பக்கமாகத் திருப்பிக் கொண்ட மெஸ்ஸி, தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்திருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு கூடுதல் போனசாக அமைந்துள்ளது.இந்த உலக கோப்பையில்  மெஸ்ஸி (35 வயது) களம் இறங்குவதற்கு முன்பே இதுதான் அவருக்கு கடைசி உலக கோப்பை என்று சொல்லப்பட்டது.  அடுத்த உலக கோப்பையில் களமிறங்கும்போது தனக்கு 39 வயதாகிவிடும் என்பதால், அதற்கான வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை என்றே மெஸ்ஸியும் கூறியிருந்தார். அதனால் உலக கோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெறுவாரா என்ற விவாதம் எழுந்தது.  ‘கடைசி உலக கோப்பை’ என்பதை மெஸ்ஸி மறுக்கவில்லை. அதே சமயம்  ஓய்வு பெறப்போவதாகவும் ஒருபோதும் சொல்லவில்லை. இந்நிலையில்  கோப்பையை வென்ற பிறகு  மெஸ்ஸி, ‘தேசிய அணிக்காக மேலும் சில காலம் விளையாடும் அனுபவத்தை பெற  விரும்புகிறேன்’ என்று கூறி ஆனந்த அதிர்ச்சியளித்தார்.  அணியின் பயிற்சியாளர்  லயோனல்  ஸ்கலோனியும் இதை உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘எங்கள் அணிக்காக மெஸ்ஸி தொடர்ந்து விளையாட வேண்டும். அடுத்த உலக கோப்பையில் விளையாடுவதா இல்லையா என்பதை அவரது முடிவுக்கே விட்டுவிட்டாலும், அணியின் அவருக்கான இடத்தை நாங்கள் காலியாகவே வைத்திருப்போம். நம்பர் 10 ஜெர்சியை அணிந்து அவர் அடுத்த உலக கோப்பையிலும் விளையாட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்,’ என்றார். ‘போகாதே லியோ’ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தகவலும் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.சக வீரர்களும் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். பல ஆண்டுகள் பார்சிலோனா (ஸ்பெயின்) கிளப்புக்காக விளையாடி வந்த  மெஸ்ஸி கடந்த 2 ஆண்டுகளாக  பிரான்சின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியில்தான்  முன்னணி நட்சத்திரங்கள் நெய்மர் (பிரேசில்), எம்பாப்பே(பிரான்ஸ்) ஆகியோரும் விளையாடி வருகின்றனர். இந்த முறை பிஎஸ்ஜி அணி அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதால், மீண்டும் அவர் அணி மாறக் கூடும் என்றும் பேசப்பட்டு வருகிறது. எனவே  இனி அது குறித்துதான் பேசப்படும். அடுத்த உலக கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரிய இன்னும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.வாழ்த்துகள் மெஸ்ஸி; ரொனால்டோபோர்ச்சுகல் அணி நட்சத்திரம் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்,  அர்ஜென்டீனா கேப்டன் மெஸ்ஸியும் இறுதி ஆட்டத்தில் மோத வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. காரணம் இந்த இருவரில் யார் உயர்ந்தவர் என்ற விவாதம் அடிக்கடி எழுவது வாடிக்கை. ஆனால், உலக கோப்பையில்  ரொனால்டோவுக்கு  போதிய வாய்ப்பு தராமல் பெஞ்ச்சில் உட்கார வைத்து விட்டார் பயிற்சியாளர். கூடவே போர்ச்சுகல் காலிறுதியுடன் விடை பெற்று விட்டது. இந்நிலையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றிவிட்டது. அது குறித்து  சமூக ஊடகத்தில்  தனது போர்த்துகீசிய மொழியில்  ரொனால்டோ, ‘இந்தப் பையனின் கால்பந்து (ஆட்டம்)  எந்த போட்டியையும் ஓரங்கட்டி விடுகிறது. உலகம் முழுவதிலும் இருந்தும் மக்கள்,  கூடவே பிரேசில்காரர்களும் மெஸ்ஸிக்காக அரங்கில் கூடியிருந்ததை பார்த்தேன். கால்பந்து விளையாட்டின் மேதைக்கு இதுதான் சரியான பிரியா விடை. மெஸ்ஸி ஒரு சகாப்தத்தின் தலைவராக இருந்தார். வாழ்த்துகள் மெஸ்ஸி!’ என்று குறிப்பிட்டுள்ளார்.ரொனால்டோவின் இந்த மனம் திறந்த பாராட்டு ‘லைக்’குகளை அள்ளி வருகிறது.திரும்ப வருவோம்னு சொல்லு... எம்பாப்பே: எம்பாப்பே பைனலில் தோற்று 2வது இடம் பிடித்தாலும், பிரான்ஸ் அணி வெற்றியை அத்தனை எளிதாக அர்ஜென்டினாவுக்கு விட்டுக் கொடுக்கவில்லை. அதிலும் இளம் வீரர் கிலியன் எம்பாப்பே (23) அடித்த ஹாட்ரிக் கோல் ஆட்டத்தை பெனால்டி ஷூட் அவுட் வரை கொண்டு சென்றது. அதில் போராடி தோற்றாலும், அதிக கோல் (8) அடித்த  வீரருக்கான  தங்கக் காலணி விருது பெற்றார் எம்பாப்பே. கோப்பை கைநழுவிப்போன நிலையில், இந்த விருது அவரை உற்சாகப் படுத்தவில்லை. அதனால் நிகழ்ச்சி முழுவதும் சோகமாகவே இருந்தார். தங்கள் அணி தோற்றதால் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ரசிகர்கள் கலவரத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக ‘நாங்கள் திரும்பி வருவோம்’ என்று எம்பாப்பே சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.



from Dinakaran.com |20 Dec 2022 https://ift.tt/uXjpaDe
via IFTTT

Post a Comment

0 Comments