ஜோதிடம்

கொல்கத்தா: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 1-2 என்ற கணக்கில் போராடி தோற்றது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில், இலங்கை அணி 67 ரன் வித்தியாசத்தில் தோற்றது.  இந்திய தரப்பில் கோஹ்லி சதம் விளாச,  கேப்டன்  ரோகித் 83 ரன், கில் 70 ரன் எடுத்தது, இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவியது.374 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணியில் நிசங்கா 72, தனஞ்ஜெயா 47 ரன் எடுக்க, தனி ஒருவராகப் போராடிய கேப்டன் தசுன் ஷனகா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 ரன் எடுத்தார். 25 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 136 ரன் என்ற இக்கட்டான நிலையில் களம் கண்ட ஷனகா சதம் விளாசி இந்திய அணியை மிரள வைத்தார். இந்திய பந்துவீச்சில் உம்ரான் மாலிக், சிராஜ், ஷமி, ஹர்திக், சாஹல், அக்சர் என அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக, சுழற்பந்துவீச்சாளர்கள் சாஹல், அக்சர் இருவரும் தலா 10 ஓவர்கள் வீசி 58 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். உம்ரான் 156 கி.மீ. வேகத்தில் பந்துவீசி ஒருநாள் போட்டிகளில் தனது அதிவேகப் பந்துவீச்சை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ், ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 2-0 என முன்னிலை பெறுவதுடன் தொடரை வெல்ல இந்தியாவும், பதிலடி கொடுத்து 1-1 என சமன் செய்ய இலங்கையும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.



from Dinakaran.com |12 Jan 2023 https://ift.tt/gG6QHcM
via IFTTT

Post a Comment

0 Comments