சிட்னி: ஆஸ்திரேலியா சென்ற தென் ஆப்ரிக்கா அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 2டெஸ்ட்களை வென்ற ஆஸி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. மோசமான வானிலை காரணமாக முதல் 4 நாட்களும் ஆட்டமும் முழுமையாக நடக்கவில்லை. ஆஸி முதல் இன்னிங்சில் 131ஓவரில் 4விக்கெட் இழந்து 375ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. இரட்டைச் சத்தை நெருங்கிய கவாஜா 195, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேத்யூ ரென்ஷா 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர். அதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தெ.ஆ, 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 59ஓவருக்கு 6விக்கெட்களை இழந்து 149ரன் எடுத்து பரிதாப நிலையில் இருந்தது. அதனையடுத்து கடைசி நாளான நேற்றும் தெ.ஆ ரன் குவிக்க தடுமாறியது. தேநீர் இடைவேளையின் போது புதுப்பந்தை பயன்படுத்த, தெ.ஆ முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 108ஓவரில் 255ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் மகராஜ் 53, ஹர்மர் 47ரன் எடுத்தனர். ஆஸி தரப்பில் ஹசல்வுட் 4, கேப்டன் கம்மின்ஸ் 3, லயன் 2, டிராவிஸ் ஹெட் ஒரு விக்கெட் எடுத்தனர். இன்னும் 21ரன் எடுத்திருந்தால் ‘ஃபாலோ ஆனை’ தவிர்த்திருக்கலாம். அந்த சூழல் ஏற்படாததால் தெ.ஆ அணியை ‘ஃபாலோ ஆன்’ விளையாட ஆஸி பணித்தது. எஞ்சிய 47ஓவரில் தெ.ஆ அணியை சுருட்டி விடலாம் என்ற இலக்குடன் ஆஸி பந்து வீச தொடங்கியது. ஆனால் 2வது இன்னிங்சை பொறுமையாக விளையாடி தெ.ஆ ரன் சேர்த்தது. ஆட்டத்தின் 42ஓவரில், 2தரப்பும் ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள ஒப்புக் கொண்டன.அந்த நேரத்தில் தெ.ஆ 2 விக்கெட் இழப்புக்கு 106ரன் எடுத்திருந்தது. சாரெல் எர்வீ ஆட்டமிழக்காமல் 42, கிளாஸ்ஸன் 35ரன் எடுத்தனர். ஹசல்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அதனால் 3 ஆட்டங்களை கொண்ட தொடரை ஆஸி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக உஸ்மான் கவாஜா, தொடர் நாயகனாக டேவிட் வார்னர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
from Dinakaran.com |09 Jan 2023 https://ift.tt/QqPpU6F
via IFTTT
0 Comments