புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் பார்டர் - கவாஸ்கர் டிராபியையும் தக்கவைத்துக் கொண்டது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியா 263 ரன் எடுக்க... இந்தியா 262 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 1 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்திருந்தது. ஹெட் 39 ரன், லாபுஷேன் 16 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். ஹெட் மேற்கொண்டு 4 ரன் மட்டுமே சேர்த்து அஷ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் பரத் வசம் பிடிபட்டார்.ஸ்மித் 9 ரன், லாபுஷேன் 35 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் அடுத்தடுத்து வெளியேற, ஆஸி. அணி 21.4 ஓவரில் 95 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஜடேஜாவின் சுழல் ஜாலத்தை சமாளிக்க முடியாமல் ஆஸி. நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பு நடத்த... அந்த அணி 23.2 ஓவரில் 95 ரன்னுக்கு 7 விக்கெட் பறிகொடுத்து பரிதவித்தது. அலெக்ஸ் கேரி (7), நாதன் லயன் (8), குனேமன் (0) ஆகியோர் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் கிளீன் போல்டாகி நடையை கட்ட, ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 113 ரன்னுக்கு சுருண்டது. மர்பி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் 65 ரன்னுக்கு 1 விக்கெட் இழந்திருந்த ஆஸி. அணி மேற்கொண்டு 48 ரன் மட்டுமே சேர்த்து 9 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 12.1 ஓவரில் 42 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 16 ஓவரில் 3 மெய்டன் உள்பட 59 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 115 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா. ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்த நிலையில், கேப்டன் ரோகித் 31 ரன் எடுத்து (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். கோஹ்லி 20 ரன், ஷ்ரேயாஸ் அய்யர் 12 ரன்னில் பெவிலியன் திரும்பினர். எனினும், புஜாரா - பரத் ஜோடி உறுதியுடன் விளையாடி ரன் சேர்க்க இந்தியா 26.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து அபாரமாக வென்றது. 100வது டெஸ்டில் விளையாடிய புஜாரா பவுண்டரி விளாசி வெற்றியை வசப்படுத்தினார். புஜாரா 31 ரன் (74 பந்து, 4 பவுண்டரி), பரத் 23 ரன்னுடன் (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் லயன் 2, மர்பி 1 விக்கெட் வீழ்த்தினர். நாக்பூரை தொடர்ந்து, டெல்லி டெஸ்டிலும் ஆல் ரவுண்டராக ஜொலித்த ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் பார்டர் - கவாஸ்கர் டிராபியையும் தக்கவைத்துக் கொண்ட நிலையில், 3வது டெஸ்ட் இந்தூரில் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது.
from Dinakaran.com |20 Feb 2023 https://ift.tt/rp8ZeSG
via IFTTT
0 Comments