லண்டன்: இங்கிலாந்து - இந்தியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி, லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிய, 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. அடுத்து நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 4வது டெஸ்ட் ஓவல் அரங்கில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து அணி 2வது டெஸ்டில் கிடைத்த தோல்விக்கு பிறகு, ஏகப்பட்ட மாற்றங்களுடன் 3வது டெஸ்டில் களம் கண்டதுடன் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றியையும் வசப்படுத்தியது. டேவிட் மலான், ஹசீப் ஹமீத், கிரெய்க் ஓவர்டன் பொறுப்புடன் விளையாடினர். தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்முக்கு திரும்பினார். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல் ரன் குவிப்பை தொடர்ந்தார். மிக முக்கியமாக அவர்களின் பந்துவீச்சு கூட்டணி அபாரமாக செயல்பட்டு இந்திய விக்கெட்களை வாரி சுருட்டியது. முதல் இன்னிங்சில் இந்தியாவை வெறும் 78 ரன்னில் ஆல் அவுட்டாக்கியதே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இன்று தொடங்கும் 4வது டெஸ்டிலும், இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. விக்கெட் கீப்பர் பட்லர் விடுமுறையில் செல்ல, சாம் பில்லிங்ஸ் களம் காண உள்ளார். ஆனாலும், கீப்பிங் பணியை பேர்ஸ்டோ தான் கவனிப்பாராம். காயத்தில் இருந்து மீண்டுள்ள மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் மீண்டும் விளையாடத் தயாராக இருக்கின்றனர். இந்திய தரப்பில் களமிறங்கும் 11 வீரர்களை இறுதி செய்வதில் சற்று தயக்கமும் தடுமாற்றமும் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கேப்டன் கோஹ்லி தனது ஆட்டத்திலும், அணியிலும் மாற்றம் கொண்டு வராதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. கோஹ்லி தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று கவாஸ்கர் முதல் நாசர் உசைன் வரை முன்னாள் பிரபலங்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவர் சதம் அடித்து 2 ஆண்டுகளாகி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் வரிசையை தீர்மானிப்பது மற்றும் பந்துவீச்சு வியூகத்திலும் கோஹ்லி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியை நெருங்கிய நிலையில், துரதிர்ஷ்டவசமாக மழையால் அது கை நழுவியது. 2வது டெஸ்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதால் இந்திய தரப்பில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கூடியது. ஆனாலும்... பந்துவீச்சு கூட்டணியில் 4 வேகம், ஒரு சுழல் என்ற வியூகத்துக்கு பதிலாக 3 வேகம், 2 சுழல் தேவை என்ற ஆலோசனையை புறம் தள்ளியதன் பலன்தான் இன்னிங்ஸ் தோல்வி. முதல் இன்னிங்சில் பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவிக்காததும் தோல்விக்கு காரணம். அதனால் இன்று களம் காண உள்ள இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம். இஷாந்த், ரகானேவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி, அக்சர் படேல் களமிறக்கப்படலாம். சூர்யகுமார் யாதவ் அல்லது பிரித்வி ஷா, மீண்டும் ஷர்துல் தாகூர் அல்லது உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஜடேஜா நீக்கப்படும் வாய்ப்பு குறைவு. அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இரு அணிகளுமே முன்னிலை பெற வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), அகர்வால், அஷ்வின், பும்ரா, ஈஸ்வரன், ஜடேஜா, ஷமி, சிராஜ், பன்ட், அக்சர், பிரசித், புஜாரா, கே.எல்.ராகுல், சாஹா, இஷாந்த், ரோகித், பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், ஹனுமா விஹாரி, உமேஷ், சூரியகுமார்.இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன், ஆண்டர்சன், பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ரோரி பர்ன்ஸ், சாம் கரன், ஹசீப் ஹமீத், டேன் லாரன்ஸ், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்ட்டன், ஆலிவர் போப், ஆலிவர் ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
from Dinakaran.com |02 Sep 2021 https://ift.tt/2WJ1y8w
via IFTTT
0 Comments