ஜோதிடம்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில்  இந்திய வீரர் பிரவீன் குமார் ஆசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.பாரா ஒலிம்பிக்கில் முதல் முறையாகக் களமிறமிறங்கிய பிரவீன் குமார் (18 வயது), நேற்று ஆடவர்  உயரம் தாண்டுதல் (டி44) போட்டியில் பங்கேற்றார்.  மொத்தம் 7 வீரர்கள் பதக்கம் வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டிய இறுதிச் சுற்றில்  பிரவீன் 2.07 மீட்டர் உயரம்  தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டிய ஜோனதன் புரூம் எட்வர்ட்ஸ்  (இங்கிலாந்து) முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கமும்,  2.04 மீட்டர் உயரம் தாண்டிய போலந்து வீரர் மெசீஜ் லெபியடோ 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் மாரியப்பன் வெள்ளியும்,  சரத்குமார் வெண்கலமும் வென்றுள்ளனர். வெள்ளி வென்ற பிரவீன் குமாருக்கு  குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் வயது இந்திய வீரர் என்ற பெருமையும் பிரவீனுக்கு கிடைத்துள்ளது.  இது குறித்து பிரவீன் கூறுகையில், ‘போட்டி தொடங்குவதற்கு முன்பாக நொய்டாவில் உள்ள எனது பெற்றோரிடம் பேசினேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய். அதிகமாக யோசித்து டென்ஷன் ஆகாதே. ஏற்கனவே நீ செய்த சாதனைகள் எங்களுக்கு போதுமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளன என்றார்கள். அதனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாக செயல்பட்டேன். இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்’ என்றார்.பிறவியிலேயே இடுப்பில் இருந்து பாதம் வரை இடது கால் எலும்புகள் பாதிக்கப்பட்டு பலவீனமாக இருந்த நிலையில், பிரவீன் தனது இயலாமயை பொருட்படுத்தாமல் தேசிய பயிற்சியாளர் சத்யபால் சிங்கின் வழிகாட்டுதலுடன் கடுமையாக உழைத்து சாதித்துக் காட்டியிருக்கிறார்.



from Dinakaran.com |04 Sep 2021 https://ift.tt/38C74MT
via IFTTT

Post a Comment

0 Comments