ஜோதிடம்

துபாய்: அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் இந்தியா - நியூசிலாந்து அணிகள் துபாயில் இன்று மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றின் 2வது பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் அக்.24ம் தேதி பாகிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. சரியாக ஒரு வாரம் கழித்து 2வது ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானிடம் மண்ணைக் கவ்விய நிலையில், இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளன. ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அணி எஞ்சியுள்ள 2 லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணிகளான நமீபியா, ஸ்காட்லாந்தை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 2வது பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறப்போகும் 2வது அணி எது என்பது இன்று அனேகமாக தெரிந்து விடும். இன்றைய இமாலய சவாலை சமாளித்துவிட்டால், அடுத்து ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றிகளைக் குவித்து அரையிறுதிக்கு முன்னேற முடியும். எனவே, இந்தியா - நியூசி. மோதல் வாழ்வா? சாவா? போராட்டமாகவே மாறியுள்ளது. இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஹர்திக்,  சூர்யகுமாருக்கு பதிலாக இஷான், ஷர்துல் இடம் பெற வாய்ப்புள்ளது. அனுபவ ஆல் ரவுண்டர் அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதில் கோஹ்லி - சாஸ்திரி - தோனி கூட்டணியின் வியூகம் என்ன என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூசி.யையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவுக்கு எதிரான ஐசிசி உலக கோப்பை ஆட்டங்களில் அந்த அணியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள நிலையில், இம்முறை இந்தியா அதை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஷர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர். நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டில், டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டிவோன் கான்வே, மார்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னி, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் செய்பெர்ட், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/3brfqIQ
via IFTTT

Post a Comment

0 Comments