மும்பை: ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவது குறித்து, டெஸ்ட் அணி தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்புதான் தெரியும். அதற்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று யாரிடமும் சொல்லவில்லை... என்று விராத் கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார். இந்திய டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லி கடந்த மாதம் விலகினார். இதையடுத்து, ரோகித் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராத் தானாக விலகியதாக சொன்னாலும், பிசிசிஐ நிர்வாகிகள் அவரை கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய டெஸ்ட் அணி தேர்வு செய்யப்பட்டது. அதனுடன் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் ரோகித் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கோஹ்லி கேப்டனாக செயல்பட உள்ளார். ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக கோஹ்லிக்கு 2 நாள் அவகாசம் அளித்தாகவும், பதவி விலக அவர் மறுத்ததால் நீக்கப்பட்டதாகவும் பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியானது. மேலும், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதாவும், ஆனால் அதை கோஹ்லி ஏற்கவில்லை என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார். * கேட்கவே இல்ல...இதற்கிடையில் ரோகித் தலைமையின் கீழ் ஒருநாள் தொடரில் விளையாட கோஹ்லி விரும்பவில்லை என செய்திகள் வெளியாகின. பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் விலகியதும் சர்ச்சையை கிளப்பியது. இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகவும் தகவல்கள் உலா வந்தன. இந்திய அணி இன்று தென் ஆப்ரிக்கா செல்லும் நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த கோஹ்லி கூறியதாவது: செப்டம்பர் 16ல் நான் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததில் இருந்து, தென் ஆப்ரிக்காவுக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்ட்ட டிச.8 வரை ஒருநாள் கேப்டன் பதவி பற்றி பிசிசிஐ ஏதும் பேசவில்லை. டெஸ்ட் அணியை அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் முன்புதான் ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் சொன்னார்கள். டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, எனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்கவே இல்லை. தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா டெஸ்ட் அணி தேர்வு குறித்து மட்டுமே என்னிடம் பேசினார். முடிக்கும் போது, நீங்கள் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க மாட்டீர்கள் என்றார். அதற்கு நான் ‘சரி...நல்லது’ என்றேன். தென் ஆப்ரிக்க ஒருநாள் தொடரில் விளையாடுவேனா என்ற கேள்வியே எழவில்லை. விளையாட மாட்டேன் என்று யாரிடமும் சொல்லவில்லை. உண்மையில், விளையாட ஆர்வமாக இருக்கிறேன். எனவே இந்த கேள்விகளை, ‘நான் விளையாட மாட்டேன்’ என்று சொல்பவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல. இந்தியாவுக்காக விளையாட நான் எப்போதும் மனதளவில் தயாராக இருக்கிறேன். அதை யாராலும் தடுக்க முடியாது. அணிக்காக என்னால் முடிந்ததை செய்து, அணியை வெற்றிபெறச் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். எந்த வகை போட்டியாக இருந்தாலும் சரி எனது பங்களிப்பை 100 சதவீதம் வழங்குவேன்.ரோகித் திறமையான கேப்டன். நுணுக்கமாக செயல்படுபவர். இந்தியா, மும்பை அணிகளின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்படுவதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம் . அவருடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்போது சகோதரர் ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் இணைந்துள்ளோம். அவர் சிறந்தவர் மட்டுமல்ல, சமநிலையான பயிற்சியாளர். அணிக்காக இருவருக்கும் எனது முழுமையான ஆதரவையும், பங்களிப்பையும் வழங்குவேன். இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார். கோஹ்லியின் டி20 கேப்டன் பதவி விலகலை தாங்கள் விரும்பாதது போல பிசிசிஐ நிர்வாகிகள் கங்குலி, ஜெய் ஷா தெரிவித்திருந்த நிலையில், கோஹ்லி அதை பகிரங்கமாக மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
from Dinakaran.com |16 Dec 2021 https://ift.tt/3GQFNpj
via IFTTT
0 Comments