பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில், கேப்டன் ஜோ ரூட் - டேவிட் மலான் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து ரன் குவித்து வருகிறது. காபா அரங்கில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 51.1 ஓவரில் 147 ரன்னுக்கு சுருண்டது. 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன் குவித்திருந்த ஆஸ்திரேலியா, நேற்று 425 ரன்னுக்கு (104.3 ஓவர்) ஆல் அவுட்டானது. வார்னர் 94, லாபுஷேன் 74, டிராவிஸ் ஹெட் 152 (148 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), ஸ்டார்க் 35 ரன் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட், ஆலிவர் ராபின்சன் தலா 3, கிறிஸ் வோக்ஸ் 2, ஜாக் லீச், ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 278 ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசீப் ஹமீது 27 ரன், ரோரி பர்ன்ஸ் 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து 21 ஓவரில் 61 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் ஜோ ரூட் - டேவிட் மாலன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரையும் பிரிக்க ஆஸி. வீரர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. ரூட் 80 பந்தில் அரை சதம் அடிக்க, மலான் 121 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். 3வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்துள்ளது (70 ஓவர்). ரூட் 86, மலான் 80 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து கை வசம் 8 விக்கெட் இருக்க, அந்த அணி இன்னும் 58 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
from Dinakaran.com |11 Dec 2021 https://ift.tt/3DGneSB
via IFTTT
0 Comments