ஹாமில்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமீபத்தில் 5 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் ஆட்டத் தொடரில் விளையாடின. உலக கோப்பை நடைபெறும் அதே நியூசிலாந்தில்தான் இந்த தொடரும் நடந்தது. பயிற்சி ஏதுமின்றி நேரடியாக களமிறங்கிய இந்தியா முதல் 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. கடைசி ஆட்டத்தில்தான் நியூசியை வீழ்த்தியது. அதன் பிறகு நடந்த 2 பயிற்சி ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா அணிகளை வென்றது. தொடர்ந்து உலக கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 107ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.அதனால் தொடர் வெற்றி மூலம் ஆட்டத்திறனில் உள்ள இந்தியா இன்று நியூசியை எளிதாக எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.ஆனால் நியூசி சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற உற்சாகத்தில் களம் காண உள்ளது. ஆனால் உலக கோப்பைத் தொடரை வெற்றிகரமாக தொடங்கவில்லை. முதல் ஆட்டத்திலேயே வெஸ்ட் இண்டீசிடம் வெற்றியை நியூசி பறி கொடுத்தது. அதனால் சொந்த ஊரில் நடைபெறும் உலக கோப்பையை வென்றாக வேண்டும் என்ற இலக்குடன் ஷோபி டிவைன் தலைமையிலான நியூசி இன்று உறுதியாக போராடும். எனவே இன்று நடைபெறும் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
from Dinakaran.com |10 Mar 2022 https://ift.tt/LHQmqTd
via IFTTT
0 Comments