ஜோதிடம்

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20ல் 50 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய 5வது டெஸ்ட் போட்டியில் (2021ல் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டது), போராடி தோற்றதால் அந்த தொடர் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. அடுத்து இரு அணிகளும் தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் மோதுகின்றன.சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்த முதல் டி20ல், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில்  8 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. ஹர்திக் 51 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்),  சூர்யகுமார் 39 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), தீபக் ஹூடா 33 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 24 ரன் (14 பந்து, 5 பவுண்டரி) விளாசினர். இங்கிலாந்து தரப்பில் மொயீன், ஜோர்டன் தலா 2, டாப்லி, மில்ஸ், பார்கின்சன் தலா 1 விக்கெட் எடுத்தனர்.தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 148 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மொயீன் 36 ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்),  ஹாரி புரூக் 28 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜோர்டன் ஆட்டமிழக்காமல் 26 ரன் (17 பந்து) அடித்தனர். இந்திய தரப்பில் பந்துவீச்சிலும் கலக்கிய ஹர்திக் 4 விக்கெட் அள்ளி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். அர்ஷ்தீப், சாஹல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.இந்தியா 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை வசப்படுத்தியது. கேப்டனாக ரோகித் தொடர்ச்சியாக பெற்ற 13வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று 2வது மோதல்: இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 பர்மிங்காமில் இன்று  இரவு தொடங்கி நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி பல மாற்றங்களுடன் களம் காண உள்ளது. கடந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்  கோஹ்லி, பும்ரா, ரிஷப் அணிக்குத் திரும்புகின்றனர். முதல் போட்டியில் கேப்டன் பட்லர், லிவிங்ஸ்டன் டக் அவுட்டானதும், ராய், சாம் தலா 4 ரன்னில் வெளியேறியதும் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இதனால் பட்லருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், வாய்ப்பை தக்கவைக்க இங்கிலாந்தும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.



from Dinakaran.com |09 Jul 2022 https://ift.tt/d1J2iHo
via IFTTT

Post a Comment

0 Comments