சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் 3 சுற்றிலும் வெற்றிகளைக் குவித்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிகள், நேற்று 4வது சுற்றில் சற்று பின்னடைவை சந்தித்தன. ஓபன் பிரிவில் பிரான்ஸ் அணியுடன் மோதிய இந்தியா-1 அணி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் டிரா செய்தது. இந்த போட்டியில் களமிறங்கிய ஹரிகிருஷ்ணா பென்டாலா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, எரிகைசி அர்ஜுன், எஸ்.எல்.நாராயணன் ஆகிய நால்வரும் தங்கள் ஆட்டங்களில் டிரா செய்து தலா அரை புள்ளி மட்டுமே பெற்றனர். மற்றொரு ஓபன் 4வது சுற்றில் இத்தாலி அணியுடன் மோதிய இந்தியா-2 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய வீரர்கள் குகேஷ், சரின் நிஹில் வெற்றி பெற்று தலா 1 புள்ளி பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா மற்றும் சாத்வனி ரவுனக் டிரா செய்து தலா 1/2 புள்ளி பெற்றனர். ஸ்பெயின் அணியுடன் பலப்பரீட்சையில் இறங்கிய இந்தியா-3 அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இந்தியாவின் சூரியசேகர் கங்குலி, எஸ்.பி.சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் டிரா செய்து தலா அரை புள்ளி பெற்ற நிலையில், ஸ்பெயினின் ஆன்டன் டேவிட் உடன் மோதிய அபிஜீத் குப்தா போராடி தோற்றார். இதனால் ஸ்பெயின் அணி இப்போட்டியில் 2.5 - 1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. மகளிர் பிரிவு 4வது சுற்றில் ஹங்கேரி அணியுடன் மோதிய இந்தியா-1 அணி 2.5க்கு 1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி, வைஷாலி ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் டிரா செய்த நிலையில், ஹங்கேரியின் கால் ஸோகாவுடன் மோதிய தானியா சச்தேவ் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு வெற்றியை பரிசளித்தார்.எஸ்டோனியாவுடன் நடந்த மகளிர் பிரிவு 4வது சுற்றில் இந்தியா-2 அணி 2.5க்கு 1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. பத்மினி ராவுத், சவும்யா ஸ்வாமிநாதன், திவ்யா தேஷ்முக் ஆகியோர் டிரா செய்து தலா அரை புள்ளி பெற்ற நிலையில், எஸ்டோனியாவின் நர்வா மெய்யுடன் மோதிய வந்திகா அகர்வால் சாதுர்யமாக காய்களை நகர்த்தி வெற்றியை தட்டிச் சென்றார். மற்றொரு மகளிர் பிரிவு 4வது சுற்றில் ஜார்ஜியாவை எதிர்கொண்ட இந்தியா-3 அணி 1-3 என்ற புள்ளிக் கணக்கில் பரிதாபமாக தோற்றது. பி.வி.நந்திதா 1 புள்ளி பெற்ற நிலையில்... கர்வாதே ஈஷா, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா போத்தா ஆகியோர் தோற்று ஏமாற்றமளித்தனர்.
from Dinakaran.com |02 Aug 2022 https://ift.tt/PCWn1kO
via IFTTT
0 Comments