சென்னை: உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபுள்யூடிஏ சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து, சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: முதலமைச்சரின் சீரிய முயற்சியால் 44வது செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்திய தமிழ்நாடு அரசு, அடுத்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து ‘சென்னை ஓபன்’ என்ற பெயரில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை முதல்முறையாக சென்னையில் நடத்த உள்ளது. அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளார். இந்த தொடருக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு ரூ.3 கோடி செலவில் மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இருக்கைகள் மற்றும் மைதானங்களை புதுப்பிக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் உலகம் முழுவதையும் சென்னை பக்கம் திருப்பியது போன்று, இந்த டென்னிஸ் போட்டியையும் 150 நாடுகளில் பார்க்க உள்ளனர். ஏற்கனவே இங்கு நடத்தப்பட்டு வந்து பின்னர் மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்ட ஆண்களுக்கான ‘ஏடிபி சென்னை ஓபன்’ தொடரை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முன்னாள் டென்னிஸ் வீரரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவருமான விஜய் அமிர்தராஜ் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். எனவே இனி வரும் ஆண்டுகளில் ஏடிபி, டபுள்யூடிஏ டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடத்தப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையில் போட்டி நடத்தி செஸ் ஒலிம்பியாட்டை காண அழைத்து வந்தது போல, உலக மகளிர் டென்னிஸ் போட்டியின்போதும் அரசு மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். செஸ் ஒலிம்பியாட் போன்றே டென்னிஸ் போட்டியும் சிறப்பாக நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ், செயலாளர் பிரேம்குமார் காரா, செயல் அலுவலர் ஹிதேன் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.நுழைவுக்கட்டண விவரம் சென்னை ஓபன் டென்னிஸ் தொடருக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் chennaiopenwta.in என்ற இணையதளத்தில் ரசிகர்கள் வாங்கலாம். செப். 12-18 வரை போட்டி நடக்கும் 7 நாட்களுக்குமான சீசன் டிக்கெட் விலை ரூ.1000, ரூ.2000, ரூ.3000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப். 12-15 வரை தினசரி டிக்கெட் கட்டணம் ரூ.100, ரூ.200, ரூ.300 ஆகவும், கடைசி 3 நாட்களுக்கான கட்டணம் ரூ.200, ரூ.400, ரூ.600 ஆக இருக்கும். டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
from Dinakaran.com |24 Aug 2022 https://ift.tt/sLEA6eT
via IFTTT
0 Comments