ஐதராபாத்: ஐதராபாத் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழகம் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 510 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. உப்பல், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச... ஐதராபாத் முதல் இன்னிங்சில் 395 ரன் குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய தமிழகம் 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 203 ரன் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் 87, நாராயண் ஜெகதீசன் 116 ரன்னுடன் (97 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜெகதீசன் மேற்கொண்டு ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுக்க, கெவின் 36 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய சாய் சுதர்சன் சதம் விளாசினார். சுதர்சன் - அபராஜித் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 134 ரன் சேர்த்தது. சுதர்சன் 179 ரன் (273 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து அபராஜித் - கேப்டன் இந்திரஜித் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்தனர். இந்திரஜித் 48 ரன் (52 பந்து, 5 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்க, தமிழகம் 4விக்கெட் இழப்புக்கு 510 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது (111.5 ஓவர்). அபராஜித் 115* (165 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் பந்துவீச்சில் தியாகராஜன் 2, கார்த்திகேயா 1 விக்கெட் எடுத்தனர். 115 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஐதராபாத், 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்துள்ளது. அபித் ரெட்டி 14 ரன் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார். கேப்டன் தன்மே அகர்வால் 5, தனய் தியாகராஜன் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
from Dinakaran.com |16 Dec 2022 https://ift.tt/S3oeObY
via IFTTT
0 Comments