ஜோதிடம்

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 45 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறி வருகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டை வென்ற இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து 2வது டெஸ்ட் மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில்  வங்கதேசம் 227 ரன்னிலும், இந்தியா 314 ரன்னிலும் ஆட்டமிழந்தன. 87 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 2வது நாள் ஆட்ட நேர முடிவில்  விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்தது. ஷான்டோ 5 ரன், ஜாகிர் ஹசன் 2 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஒரு முனையில் ஜாகிர் ஹசன் உறுதியுடன் விளையாட... ஷான்டோ, மோமினுல் தலா 5, கேப்டன் ஷாகிப் ஹசன் 13, முஷ்பிகுர் ரகிம் 9 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் அடித்த ஜாகிர் 51 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸ் டக் அவுட்டானார். இந்த நிலையில் லிட்டன் தாஸ் - நூருல் ஹசன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தனர். நூருல் 31 ரன் எடுத்து அக்சர் சுழலில் விக்கெட் கீப்பர் பன்ட் ஸ்டம்பிங் செய்ய ஆட்டமிழந்தார். அடுத்து லிட்டன் தாஸ் - டஸ்கின் அகமது ஜோடி 8வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 60 ரன் சேர்த்தது. தாஸ் 73 ரன் (98 பந்து, 7 பவுண்டரி) விளாசி சிராஜ் வேகத்தில் கிளீன் போல்டானார். தைஜுல் இஸ்லாம் 1, காலித் அகமத் 4 ரன்னில் வெளியேற, வங்கதேசம் 2வது இன்னிங்சில் 231 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (70.2 ஒவர்). டஸ்கின் அகமது 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அக்சர் 3, அஷ்வின், சிராஜ் தலா 2, உமேஷ், உனத்கர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ராகுல் 2 ரன் மட்டுமே எடுத்து ஷாகிப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் நூருல் வசம் பிடிபட இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே புஜாரா 6 ரன், கில் 7 ரன் எடுத்து, மெஹிதி ஹசன் மிராஸ் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட, இந்தியா 29 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. நைட் வாட்ச்மேனாக உள்ளே வந்த அக்சர் படேல் நம்பிக்கையுடன் விளையாடி ரன் சேர்க்க, விராத் கோஹ்லி 22 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது இந்தியாவுக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. அவர் மிராஸ் சுழலில் மோமினுல் ஹக் வசம் பிடிபட்டார். 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது. கை வசம் 6 விக்கெட் இருக்க, இந்தியா எஞ்சியுள்ள 100 ரன்களை எடுத்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? இல்லை... இந்தியாவை 145 ரன்னுக்குள் சுருட்டி வங்கதேசம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்யுமா? என்ற சுவாரசியமான கேள்விகளுடன் இன்று பரபரப்பான 4ம்நாள் ஆட்டம் நடக்கிறது.



from Dinakaran.com |25 Dec 2022 https://ift.tt/p83qOVK
via IFTTT

Post a Comment

0 Comments