ஜோதிடம்

டெல்லி: ரஞ்சி கோப்பை  கிரிக்கெட் போட்டியின் 3வது லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. டெல்லியில் நடைபெறும்  ஒரு ஆட்டத்தில் டெல்லி - தமிழ்நாடு அணிகள் மோதுகின்றன. உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர், நாடு முழுவதும் 14 நகரங்களில் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் 3வது சுற்று லீக் ஆட்டங்கள் இன்று முதல் டிச.30 வரை நடக்க உள்ளன. எலைட் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற வேண்டிய நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் டிரா ஆனது.  தொடர்ந்து கோவையில் நடந்த 2வது ஆட்டத்திலும் ஆந்திராவை எளிதில் வெல்லும் சூழல் இருந்தது. அதில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி 8 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அதனால் பி பிரிவு புள்ளிப் பட்டியலில் வெறும் 3 புள்ளிகளுடன் 6வது இடத்தில் பின்தங்கி உள்ளதுடன், காலிறுதி வாய்ப்பும் கேள்விக் குறியாகி உள்ளது. எஞ்சியுள்ள ஆட்டங்களில் வென்றால் மட்டுமே காலிறுதி வாய்ப்பு என்ற நிலையில் இன்று தொடங்கும் 3வது சுற்று லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.டெல்லி அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களில் ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் ஒரு புள்ளி மட்டும் பெற்று 7வது இடத்தில் உள்ளது. யாஷ் துல் தலைமையிலான டெல்லி அணியில் அசாமுக்கு எதிராக 252*, 152 ரன் விளாசிய துருவ் ஷோரே உடன் அதிரடி ஆட்டக் காரர்கள் நிதிஷ் ராணா, அனுஜ் ராவத், ஹர்ஹித் ராணா, பிரான்ஷு விஜய்ரன் தமிழகத்துக்கு சவால் தர காத்திருக்கின்றனர். அதே சமயம், இந்தரஜித் தலைமையிலான தமிழ்நாடு அணியில் சாய் சுதர்சன், ஜெகதீசன், விக்னேஷ், சாய் கிஷோர், அபராஜித்... என சிறந்த வீரர்களுக்கு பஞ்சமில்லை. இவர்கள் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இரு அணிகளும் ரஞ்சி தொடரில் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களும் டிராவில் முடிந்துள்ளன. புதுச்சேரி - ராஜஸ்தான்: பெரும்பாலும் வட மாநில வீரர்கள் இடம் பெற்றுள்ள புதுச்சேரி அணி, தனது 3வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது. சி பிரிவில் உள்ள இந்த 2 அணிகளும் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இந்த தொடரில் கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களிலும் புதுச்சேரி தோல்வியையும், ராஜஸ்தான் டிராவையும் சந்தித்துள்ளது.



from Dinakaran.com |27 Dec 2022 https://ift.tt/HJ43LQG
via IFTTT

Post a Comment

0 Comments